கோவை அவினாசி சாலையில் உள்ள தனியார் விடுதியில் இளைஞானி இளையராஜாவுக்கு ரோட்டரி கிளப்பின் உயரிய விருதான தொழில் சிறப்பு விருது வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இளையராஜாவிற்கு ரசிகர்கள் பூங்கொத்து, ஓவியங்கள் வழங்கி புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய இளையராஜா கூறும் போது :

நான் பேச்சாளர் இல்லை. நான் ஒரு பாட்டாளி. பாட்டாளி என்றால் பாட்டு பாடுபவன். பாட்டாளி என்பவன் வேலை செய்பவன். அவன் படும் பாடுகளால் அவன் பாட்டாளியாக இருக்கிறான். அந்த பாட்டாளிகளில் நானும் ஒருவன். என் பாடு என்பது வேறு. அவர்களது பாடு வேறு. என் பாடு தான் பாட்டுகளாக மாறுகிறது. கோவையில் என் காலடி படாத இடமே இல்லை. அப்போது இருந்த கோவையில் ஒவ்வொரு தெருவிலும் என் ஆர்மோனியம் ஒலிக்காத தெருவே கிடையாது.
எனது ஆர்மோனியம் பெட்டி கோவையில் செய்தது தான். எனது அண்னன் வாங்கி வந்த ஆர்மோனியம் அது. அதில் தான் இன்றும் நான் பாடல்களை கம்போஸ் செய்து வருகிறேன். எனக்கும் கோவைக்கும் நெருங்கிய உறவு இல்லை. தொடர்பு தான் உள்ளது. என்னையும், கோவையையும் பிரிக்க முடியாது என கூறினார்.