• Fri. Feb 20th, 2026
WhatsAppImage2026-02-12at2247202
previous arrow
next arrow
Read Now

ஆறி போன டீயை கொடுத்த மருமகளை திட்டிய மாமியார் படுகொலை..!

Byவிஷா

Mar 9, 2023

ஆறிப்போன டீயை கொடுக்கிறாயே என கேள்வி கேட்ட மாமியாரை மருமகள் இரும்புக்கம்பியால் தாக்கி கொலை செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே உள்ள மலைக்குடிபட்டியை சேர்ந்த வேலு என்பவரது மனைவி பழனியம்மாள் (75). இவர்களுக்கு 3 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். மகன் சுப்பிரமணியனின் மனைவி கனகு (42). கணவர் வேலு இறந்து விட்டதால், பழனியம்மாள் தனது மகனுடன் தங்கியிருந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் தலைவலியால் அவதிப்பட்ட பழனியம்மாள் தனது மருமகளிடம் சூடாக ஒரு டீ போட்டு தருமாறு கேட்டுள்ளார். அவரும் டீ போட்டு கொடுத்தார். அதை வாங்கிய மாமியார் டீ ஏன் ஆறி போய் உள்ளது என்று கேட்டு மருமகளை திட்டியதாக கூறப்படுகிறது. அப்போது, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதனால், ஆத்திரம் அடைந்த மருமகள் கனகு அருகில் கிடந்த இரும்பு கம்பியை எடுத்து மாமியார் என்று கூட பாராமல் தலை உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக தாக்கியுள்ளார். இதில், படுகாயமடைந்த பழனியம்மாள் வலி தாங்க முடியாமல் அலறி கூச்சலிட்டார். இதனையடுத்து, அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து பார்த்தனர். உடனே காயமடைந்த பழனியம்மாளை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் பழனியம்மாளின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கொலை சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து கனகுவை கைது செய்தனர்.