• Wed. May 8th, 2024

ரயில்வே வளர்ச்சி பற்றி விவாதிக்க திருவனந்தபுரம் கோட்டத்தில் எம்.பி க்கள் கூட்டம்.., தென் மாவட்ட மக்களின் கனவுகள் நிறைவேறுமா?

Byத.வளவன்

Jan 4, 2022

ரயில்வே துறையின் வளர்த்திட்டங்கள் குறித்து, திருவனந்தபுரம் கோட்டத்தின் கீழ் ஜன.12ல் நடைபெறும் எம்.பி.க்கள் கூட்டத்தில் தென்மாவட்ட மக்களின் நீண்டநாள் கோரிக்கை நிறைவேறுமா? என்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கின்றது.


திருவனந்தபுரம் கோட்டத்தின் கீழ் உள்ள எம்.பி க்கள் ரயில்வே வளர்ச்சி திட்டங்கள் குறித்து விவாதிக்க தெற்கு ரயில்வே பொது மேலாளர் தலைமையில் கூட்டம் இந்த மாதம் 12ஆம் தேதி புதன்கிழமை திருவனந்தபுரத்தில் வைத்து நடைபெற இருக்கின்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளும் படி எம்.பி க்களுக்கு கடிதம் தனித்தனியாக அனுப்பப்பட்டு கூட்டத்தில் விவாதிக்க கருத்துக்களையும், கோரிக்கைகளையும் தெற்கு ரயில்வே மண்டலத்துக்கு அனுப்பும் படி கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்காக பயணிகள் சங்கங்கள் தங்கள் கோரிக்கைகளை எம்.பிகளுக்கு சமர்ப்பித்துள்ளனர்.


கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் திருவனந்தபுரம் கோட்டத்தின் கீழ் வருவதால் கன்னியாகுமரி எம்.பி திருவனந்தபுரம் கோட்டத்தின் கீழ் நடைபெறும் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள இருக்கிறார். இதைப்போல் காவல்கிணறு முதல் திருநெல்வேலி வரை உள்ள பகுதிகள் திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதிக்குள் உள்ளது. ஆனால் இந்த பகுதிகள் திருவனந்தபுரம் கோட்டத்தின் கீழ் வருகின்ற காரணத்தால் திருநெல்வேலி எம்.பிக்கும் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தென்மாவட்டங்களில் இருந்து பாராளுமன்ற மேலவைக்கு தேர்வு செய்யப்பட்ட ஒரே எம்.பியான விஜயகுமாருக்கும் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 2019 கூட்டம்:
இதற்கு முன்பு கடந்த 2019-ம் ஆண்டு எம்.பி களின் இந்த கூட்டத்தில் தமிழக எம்.பிகள் பல்வேறு ரயில்வே கோரிக்கைகளை சமர்ப்பித்து விவாதித்தனர். இதில் உள்ள கோரிக்கைகளில் சுமார் 5 சதவிகித கோரிக்கைகள் கூட சரி செய்யப்படவில்லை. இந்த கூட்டத்தில் அதே கோரிக்கைகள் மற்றும் ஒரு சில கோரிக்கைகள் சேர்த்து மீண்டும் தமிழக எம்.பிக்கள் சமர்ப்பிக்க இருக்கின்றனர். தெற்கு ரயில்வே இந்த கலந்துரையாடல் முடிந்தாலும் ஒரு கோரிக்கையும் சரி செய்யப்போவது இல்லை என்பது அனைவருக்கும் தெரிந்த கதைதான். இதையும் மீறி தெற்கு ரயில்வே நிர்வாகம் நாங்கள் ரயில்வே வாரியத்துக்கு திட்ட கருத்துரு அனுப்பிவிட்டோம். ரயில்வே வாரியத்தின் ஒப்புதலுக்காக காத்துக் கொண்டிருக்கின்றோம் என்று பதில் அளித்து விட்டு அமைதியாக இருந்து விடும்.

கடந்த ஐந்து ஆண்டுகளில் 813 புதிய ரயில்கள் இந்திய அளவில் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் தமிழகத்தில் மிகவும் குறைவான அளவே புதிய ரயில்கள் அறிவிப்புகள் அறிவிக்கப்பட்டன. தமிழ்நாட்டை வேண்டும் என்று ஒன்றிய அரசு புறக்கணித்து மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்தி வருகிறது. இதற்கு தெற்கு ரயில்வே அதிகாரிகள் முழு உடந்தையாக உள்ளனர். உடனடியாக தமிழக எம்.பிகள் தமிழக முதல்வர் நேரடியாக களத்தில் இறங்கி இந்திய பிரதமர் மோடி அவர்களையும் ரயில்வே அமைச்சர் அவர்களையும் நேரடியாக சந்தித்து தமிழகத்தில் நிலுவையில் உள்ள திட்டங்களை செயல்படுத்தவும், திட்டங்களுக்கு அதிக நிதி ஒதுக்கவும் வருடம் தோறும் அதிக ரயில்கள் இயக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு பயணிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.

முக்கிய கோரிக்கைகள்

சென்னை -கன்னியாகுமரி வந்தே பாரத் ரயில்:
கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு பாரத பிரதமர் இந்தியா முழுவதும் 75 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படும் என்று அறிவித்தார்கள். இந்த வந்தே பாரத் ரயில் வடஇந்தியாவில் இரண்டு வழித்தடங்களில் தற்போது இயக்கப்பட்டு வருகிறது. சென்னையில் உள்ள ரயில் இணைப்பு பெட்டி தொழிற்சாலையில் புதிய வந்தே பாரத் பெட்டிகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த பெட்டிகளில் முதல் செட் பெட்டிகள் வருகின்ற மார்ச் மாதம் வெளியாகிறது. இந்த ரயில் பெட்டிகளை வைத்து சென்னையிலிருந்து திருச்சி, மதுரை வழியாக கன்னியாகுமரிக்கு புதிய ரயில் அறிவித்து இயக்க வேண்டும் என்று தென் மாவட்ட பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த ரயில் காலையில் சென்னையில் புறப்பட்டு மதியம் கன்னியாகுமரி வந்து விட்டு மதியம் அங்கிருந்து புறப்பட்டு இரவு சென்னை செல்லுமாறு இயக்க வேண்டும். இந்த ரயில் இவ்வாறு இயங்கும் போது தற்போது சென்னை – மதுரை வழித்தடத்தில் இயங்கும் தேஜஸ் ரயிலை திருநெல்வேலி வரை நீட்டிப்பு செய்து திருநெல்வேலியிருந்து காலை புறப்பட்டு மதியம் சென்னை சென்றுவிட்டு மதியம் சென்னையிலிருந்து புறப்பட்டு இரவு திருநெல்வேலி வந்து சேருமாறு இயக்கலாம் என்று கோரிக்கை விடப்படுகின்றது.


சென்னை – ஐதராபாத் ரயில் கன்னியாகுமரி நீட்டிப்பு:
தமிழ்நாட்டின் தென்மாவட்ட பகுதிகளிலிருந்து தெலுங்கானாவின் தலைநகரான ஐதராபாத்துக்கு செல்ல நேரடி தினசரி ரயில் வசதி இல்லை திருநெல்வேலி, மதுரை மற்றும் திருச்சி போன்ற நகரங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் ஐதராபாத்துக்கு வேலைவாய்ப்பு மற்றும் பல்வேறு பணிகள் காரணமாக தினசரி சென்று வருகின்றனர். ஐதராபாத்தை தலைமையிடமாக கொண்ட தென் மத்திய ரயில்வே மண்டலம் ஐதராபாத்திலிருந்து காசிபட், விஜயவாடா வழியாக சென்னை தாம்பரத்துக்கு இயக்கப்பட்டு வரும் தினசரி ரயிலை திருச்சி, மதுரை, திருநெல்வேலி வழியாக கன்னியாகுமரி வரை நீட்டித்து இயக்க இந்த வருடம் நடைபெற்ற ரயில்வே கால அட்டவணை மாநாட்டில் திட்ட கருத்துரு சமர்ப்பித்தது. இந்த கோரிக்கையை அனைத்து எம்.பிகளும் இணைந்து தெற்கு ரயில்வே பொது மேலாளரிடம் கொடுக்க வேண்டும் என்று தென்மாவட்ட பயணிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.


நாகர்கோவில் -சென்னை ரயிலை தினசரி ரயிலாக மாற்ற கோரிக்கை:
தென்மாவட்ட பயணிகள் தற்போது இயக்கப்படும் ரயில்களில் சென்னை சென்று வர செல்ல முன்பதிவு பயணச்சீட்டு கிடைக்காமல் அவதிப்படுகிறார்கள். ஆகவே நாகர்கோவிலிருந்து திருநெல்வேலி, மதுரை, திருச்சி, விழுப்புரம் வழியாக சென்னை எழும்பூருக்கு தற்போது இயக்கப்பட்டு வரும் வாரத்திற்கு மூன்று நாள் ரயிலை தினசரி ரயிலாக மாற்றி இயக்க வேண்டும். இது மட்டுமல்லாமல் நாகர்கோவில் – சென்னை சென்ட்ரல் வாராந்திர ரயிலை தினசரி ரயிலாக இயக்க வேண்டும் என்ற கோரிக்கையும் முக்கிய கோரிக்கை ஆகும்.
திருவனந்தபுரம் – மங்களூர் ரயில் நீட்டிப்பு:


கன்னியாகுமரியிலிருந்து மங்களூருக்கு தினசரி இரவு நேர ரயில் வசதி இல்லை. இந்த தடத்தில் தினசரி இரவு நேர ரயில் இயக்க வேண்டும் என்பது 20 ஆண்டுகால கோரிக்கை ஆகும். இதற்கு திருவனந்தபுரம் – மங்களூர் இரவு நேர ரயிலை திருநெல்வேலிக்கு நீட்டிப்பு செய்து இயக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. திருவனந்தபுரம் – மங்களூர் மலபார் ரயிலை நீட்டிப்பு செய்ய திருவனந்தபுரம் கோட்டம் சார்பாக திட்டம் வகுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
திருவனந்தபுரம் – திருநெல்வேலி நேரடி ரயில்கள்:


நாகர்கோவிலிருந்து திருவனந்தபுரம் மார்க்கம் தினசரி ஐந்து பயணிகள் ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதைப்போல் மறுமார்க்கமாக திருவனந்தபுரத்திலிருந்து நாகர்கோவிலுக்கு ஆறு பயணிகள் ரயில்கள் இயக்கப்படுகின்றன. ஆனால் நாகர்கோவிலிலிருந்து திருநெல்வேலி மார்க்கம் இரண்டு ரயில்கள் இயக்கப்பட்டு வந்தது ஒரு ரயில் நாகர்கோவில் – கோவை ரயில் எக்ஸ்பிரஸ் ஆக மாற்றப்பட்டு நிறுத்தங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. தற்போது ஒரே ஒரு பயணிகள் ரயில் ஒரு மார்க்கமாக மட்டுமே ரயில்தான் இயக்கப்படுகின்றன. இந்த இரண்டு பகுதிகளும் ஒரே கோட்டத்துக்கு உள்ளேதான் அடங்கியுள்ளன. திருவனந்தபுரத்திலிருந்து திருநெல்வேலிக்கு செல்ல நேரடியாக எந்த ஒரு பயணிகள் ரயிலும் இல்லை. நாகர்கோவில் -திருவனந்தபுரம், நாகர்கோவில் – திருநெல்வேலி ஆகிய தடங்களில் இயங்கும் பயணிகள் ரயில்களை ரத்து செய்து விட்டு அதற்கு பதிலாக திருவனந்தபுரம் – திருநெல்வேலி நேரடி வழித்தடத்தில் ரயில் இயக்க வேண்டும்.


மதுரை – புனலூர் எக்ஸ்பிரஸ் ரயில் வேளாங்கண்ணி வரை நீட்டிப்பு:
தென் மாவட்டங்களில் இருந்து கிறிஸ்தவர்களின் புனித இடமான வேளாங்கண்ணிக்கு செல்ல நேரடி ரயில் வசதி இல்லை. கன்னியாகுமரி, திருவனந்தபுரம், திருநெல்வேலி மாவட்ட பயணிகள் திருச்சி சென்று விட்டு இரண்டு ரயிலில் பயணம் செய்து வேளாங்கண்ணி செல்வதாக இருந்தால் கூட போதிய இணைப்பு ரயில் வசதி இல்லை. ஆகவே இந்த மதுரை – புனலூர் ரயிலை திருச்சி வழியாக வேளாங்கண்ணி வரை நீட்டிப்பு செய்து இயக்க வேண்டும்.

திருநெல்வேலி – ஈரோடு எக்ஸ்பிரஸ் ரயில் கொச்சுவேலி வரை நீட்டிப்பு:
கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து மதுரை உயர் நீதிமன்றத்திற்கு செல்ல போதிய ரயில் வசதி இல்லை. தற்போது நாகர்கோவிலிருந்து இரவு 10:40க்கு பிறகு மறுநாள் காலை 6:00 மணிக்கு தான் ரயில் வசதி உள்ளது. இதைப்போல் காலை 7.30 க்கு செல்லும் குருவாயூர் – சென்னை ரயிலுக்கு பிறகு மதியம் 12:40க்கு தான் திருச்சி செல்லும் இன்டர்சிட்டி ரயில் உள்ளது.

மறுமார்க்கமாக மதுரையிலிருந்து 16:30க்கு அடுத்து இரவு 23:25 க்கு தான் ரயில் வசதி உள்ளது. ஆகவே தற்போது திருநெல்வேலியிருந்து ஈரோட்டுக்கு இயக்கப்பட்டு வரும் பகல் நேர ரயிலை நாகர்கோவில் டவுன் வழியாக கொச்சுவேலி வரை நீட்டிப்பு செய்து இயக்க வேண்டும். இந்த ரயில் அலுவல் பணிகள் நிதித்தமாக குறிப்பாக உயர்நீதிமன்றத்துக்கு வழக்குகள் சம்மந்தமாக மதுரை செல்லும் பயணிகள் காலையில் புறப்பட்டால் அலுவல் துவங்குவதற்கு முன்பு செல்லும் உயர்நீதிமன்றத்துக்கு வழக்குகள் சம்பந்தமான பணிகளை முடித்து இந்த ரயிலில் புறப்பட்டால் அதே நாள் வீடுகளுக்கு வந்து சேர முடியும்.


முழுவதும் குளிர்சாதன ஹம்சாபர் ரயில் ஷேடோ கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில்:
தென்மாவட்ட பயணிகள் தற்போது இயக்கப்படும் ரயில்களில் சென்னை சென்று வர செல்ல முன்பதிவு பயணச்சீட்டு கிடைக்காமல் அவதிப்படுகிறார்கள். அதில் குளிர்சாதன பெட்டிகளில் பயணிக்கும் பயணிகள் முன்பதிவு இருக்கைகள் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர். ஆகவே கன்னியாகுமரியிலிருந்து திருநெல்வேலி, மதுரை, திருச்சி, விழுப்புரம் வழியாக சென்னை எழும்பூருக்கு தினசரி செல்லத்தக்க வகையில் முழுவதும் குளிர்சாதன வசதி பெட்டிகள் மட்டும் கொண்ட ஹம்சாபர் ஷேடோ கன்னியாகுமரி தினசரி ரயில் இயக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
சென்னை – நிஜாமுதீன் ராஜதானி ரயிலை மதுரை, நாகர்கோவில், வழியாக திருவனந்தபுரம் வரை நீட்டிப்பு:


தற்போது இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலத்தின் தலைநகரிலிருந்து இந்தியாவின் தலைநகரான புதுடில்லிக்கு அதிவேக சூப்பர் பாஸ்ட் ரயில் ராஜதானி எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயிலில் உணவுடன் சேர்த்து கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த ரயில் அதிவேகத்தில் இயக்கப்படுவதால் வியாபார நிமித்தமாக செல்பவர்கள் இந்த ரயிலில் அதிக அளவில் பயணிக்கின்றனர். தென்னிந்தியாவில் இந்த ரயில்கள் திருவனந்தபுரம், பெங்களூர், சென்னை, ஹைதராபாத் போன்ற இடங்களிலிருந்து புதுடில்லிக்கு இயக்கப்படுகிறது. தமிழகத்துக்கு என்று இயக்கப்படும் ராஜதானி ரயில் சென்னையிலிருந்து இயக்கப்படுகிறது. தமிழகத்தில் உள்ள உள்ள சுமார் 14 மாவட்ட பயணிகள் வசதிக்காக சென்னையிலிருந்து புதுடில்லிக்கு இயக்கப்படும் ராஜதானி ரயிலை வாரத்துக்கு ஒரு முறை மட்டும் திருச்சி, மதுரை, நாகர்கோவில் வழியாக திருவனந்தபுரம் வரை நீட்டிப்பு செய்து இயக்க வேண்டும். இவ்வாறு ரயில் இயக்கும் போது தமிழகத்தின் தலைநகரான சென்னைக்கு 14 மாவட்டங்களிலிருந்து அதிவிரைவாக செல்ல ரயில் வசதி கிடைக்கும். இது மட்டும் இல்லாமல் சென்னையிலிருந்து புதுடில்லிக்கு கூடுதலாக ராஜதானி ரயில் வசதி கிடைக்கும். இவ்வாறு இயக்கினால் மட்டுமே ஒட்டுமொத்த தமிழக ரயில் பயணிகளுக்கு ராஜ்தானி ரயில் சேவை கிடைக்கும்.

கன்னியாகுமரி – திப்ருகர் ரயிலை திருநெல்வேலி, மதுரை, திருச்சி,சென்னை வழியாக இயக்க கோரிக்கை:


இந்தியாவில் 2017-18 பட்ஜெட்டில் காண்பிக்கப்பட்டுள்ள 2016-17ம் ஆண்டு எடுக்கப்பட்ட எகனாமிக் சர்வே படி, புலம்பெயர் பவர்கள் அதிகம் செல்லும் முதல் மாநிலம் தமிழ்நாடு. இரண்டாவது மாநிலம் கேரளா ஆகும். இவ்வாறு வரும் நபர்களுக்கு தென்மாவட்டங்களில் ஒரே ஒரு வாராந்திர ரயிலாக கன்னியாகுமரி – ஹவுரா ரயில் மட்டுமே உள்ளது. தெற்கு ரயில்வே கோட்டத்தில் அதிக வழித்தடங்கள் உள்ள மதுரை மற்றும் திருச்சி கோட்டங்களில் இருந்து புறப்படும் படியாக சுமார் 1000 கி.மீ தூரத்துக்கு மேல் செல்லதக்க வகையில் ஒரு தினசரி ரயில் சேவை கூட இது வரை இல்லாமல் உள்ளது. தமிழகத்தின் கடைசி மாவட்டம் கன்னியாகுமரியிலிருந்து அஸ்ஸாம் மாநிலத்தில் உள்ள திப்ருகர் என்ற இடத்துக்கு தினசரி ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக பயணிகள் பயன்பெறும் விதத்தில் இந்த ரயிலை திருநெல்வேலி, மதுரை, திருச்சி,சென்னை வழியாக இயக்க வேண்டும்.
திட்டங்கள்


கன்னியாகுமரியிலிருந்து காரைக்குடி வரை கடற்கரை வழியாக புதிதாக இரயில் பாதை அமைக்க கோரிக்கை


கன்னியாகுமரியிலருந்து தொடங்கி கூடங்குளம், திருச்செந்தூர், தூத்துக்குடி, காயல்பட்டிணம், ஆறுமுகநேரி, சாயல்குடி, ஏர்வாடி, கீழக்கரை, ராமநாதபுரம் வழியாக காரைகுடி வரை புதிய ரயில்வே இருப்புபாதை தடம் அமைக்க 2008-09 ரயில் நிதிநிலை அறிக்கையில் தொடக்கநிலை பொறியியல் மற்றும் போக்குவரத்து ஆய்வு பணி செய்ய அறிவிக்கப்பட்டது. காரைக்குடி முதல் கன்னியாகுமரி வரை மொத்தம் 34 ரயில் நிலையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திட்டம் 462.47 கி.மீ தூரத்தில் 1965.763 கோடிகள் திட்ட மதிப்பீட்டில் அமைக்கப்படும் என்று சமர்பிக்கப்பட்ட ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டள்ளது. இந்த ரயில் பாதை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தென்மாவட்ட பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆளுரிலிருந்து நாகர்கோவில் வழியாக செட்டிகுளத்துக்கு 24 கி.மீ தூரத்துக்கு புதிய ரயில் பாதை அமைக்க கோரிக்கை:
குமரி மாவட்டத்தில் உள்ள அளுரிலிருந்து நாகர்கோவில் வழியாக நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகில் உள்ள செட்டிகுளத்துக்கு 24 கி.மீ தூரத்துக்கு புதிய ரயில் பாதை அமைக்க தொடக்கநிலை பொறியியல் மற்றும் போக்குவரத்து ஆய்வு பணிக்கு கடந்த 2013-ம் ஆண்டு ரயில்பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. குமரி மாவட்ட வளர்ச்சிக்கு இந்த திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.


சங்கரன்கோவில் – திருநெல்வேலி புதிய பாதை:
திருநெல்வேலியிருந்து சங்கரன்கோவிலுக்கு 160 கி.மீக்கு புதிய ரயில் பாதை அமைக்க தொடக்கநிலை பொறியியல் மற்றும் போக்குவரத்து ஆய்வு பணிக்கு கடந்த 2013-ம் ஆண்டு ரயில்பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. நெல்லை மாவட்டத்தில் கூடுதல் ரயில்வழித்தடம் அமைக்க இந்த திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று நெல்லை மாவட்ட பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *