• Mon. Dec 8th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

சாலை எது – மழை நீர் எது என தெரியாமல் வாகன ஓட்டிகள் கடும் சிரமம்…

BySeenu

Nov 9, 2023

கோவை மாவட்டத்தில் நேற்று இரவு பரவலாக இடைவிடாமல் பெய்த மழை காரணமாக பல்வேறு இடங்களில் மழை நீர் தேங்கி பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகினர்.

வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழ்நாடு முழுவதும் பரவலாக மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக இரவு வேலைகளில் கன மழை பெய்து வருகிறது.

நேற்று காலை முழுவதும் லேசான மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் இரவு பத்து மணி அளவில் கனமழை துவங்கியது.விடிய விடிய தொடர்ந்து கன மழை பெய்ததால் மாநகரின் பல்வேறு பகுதிகளிலும் மழை நீர் தேங்கி பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.

உக்கடம் பகுதியில் தற்போது மேம்பாலம் கட்டும் பணிகள் நடைபெற்று வருவதால் மேம்பாலத்தின் கீழ் மழை நீர் தேங்கியது. இதனால் சாலை எது – மழை நீர் எது என தெரியாமல் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.

கோவை மாவட்டத்திற்கு இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், கல்லூரிகள் வழக்கம் போல் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இன்று காலை கல்லூரிகளுக்கு வாகனங்களில் சென்ற மாணவர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.

இந்த மேம்பால பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். எனவே தாழ்வான பகுதிகளில் உள்ளவர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. நகரின் பல்வேறு பகுதிகளிலும் சாலைகளில் மழை நீர் தேங்கி இருப்பதால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துடன் வாகனங்களை இயக்கி வருகின்றனர்.

இதனிடையே தீபாவளி பண்டிகை வருகிற ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட உள்ளதால் இந்த தொடர் மழையால் வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டு இருப்பதாக வணிகர்கள் வேதனை தகவல் தெரிவித்து உள்ள நிலையில் பொருட்களை வாங்குவதற்காக கடைவீதிகளுக்கு செல்லும் பொதுமக்களும் பெரும் சிக்கலுக்கு ஆளாகி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.