• Wed. May 1st, 2024

இஸ்ரேல் – பாலஸ்தீன மோதலில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு..!

Byவிஷா

Oct 9, 2023

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கு இடையிலான மோதலில் சுமார் 1,000 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் இஸ்ரேல் தரப்பில் மட்டும் சுமார் 600-க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும், கடந்த 10 ஆண்டுகளில் இந்த இருதரப்புக்கும் இடையிலான மோதலில் ஏற்பட்ட இழப்புகளில் இது அதிகம் எனவும் தகவல்கள் தெரிவிக்கிறது.
கடந்த சனிக்கிழமை அன்று இஸ்ரேலை குறிவைத்து பாலஸ்தீனத்தின் ஹமாஸ் பயங்கரவாதிகள் ராக்கெட் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடியாக இஸ்ரேல் விமானப்படையின் போர் விமானங்கள் மூலம் பாலஸ்தீனத்தின் காசா நகரம் மீது குண்டு மழை பொழிந்தன. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட ஹமாஸ் பயங்கரவாதிகள் உயிரிழந்ததாக இஸ்ரேல் தெரிவித்தது.
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, நாடு போரில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தார். அதன் காரணமாக காசாவில் வசிக்கும் மக்களை வெளியேறுமாறு அவர் தெரிவித்துள்ளார். இந்தியா உட்பட அமெரிக்கா, ஜெர்மனி, இத்தாலி மற்றும் உக்ரைன் நாடுகள் இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.
“நாங்கள் போரைத் தொடங்குகிறோம். ஹமாஸ் பயங்கரவாதிகள் மேற்கொண்ட தாக்குதலால் இந்த போர் மூண்டுள்ளது. இஸ்ரேல் எல்லைக்குள் ஊடுருவிய எதிரிப்படைகளை அழிக்க தொடங்கி உள்ளோம். இது இடைவிடாமல் தொடரும். இஸ்ரேல் குடிமக்களுக்கான பாதுகாப்பை மீட்டெடுப்போம். நாங்கள் வெற்றி பெறுவோம். காசாவில் வசிக்கும் பாலஸ்தீனியர்களுக்கு நான் ஒன்று சொல்லிக் கொள்கிறேன். இப்போதே அங்கிருந்து வெளியேறுங்கள். ஏனெனில், எங்கள் படையினர் தடையின்றி செயல்பட உள்ளனர்” என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை அன்று தெற்கு இஸ்ரேல் பகுதியில் அந்நாட்டு ராணுவத்தினர் ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கு தக்க பதிலடி கொடுத்தனர். அதே நேரத்தில் வடக்கு இஸ்ரேல் பகுதியில் லெபனானின் ஹிஸ்புல்லாஹ் போராளிக் குழுவுடன் ஏற்பட்டுள்ள சிறிய மோதலும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இது ஹமாஸ் பயங்கரவாத குழுவுக்கு ஆதரவாக மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் என தகவல்.
ஹமாஸ் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் இஸ்ரேலை சேர்ந்த 600 பேர் கொல்லப்பட்டு உள்ளதாகவும், ஆயிரம் பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல இஸ்ரேல் நடத்திய பதில் தாக்குதலில் சுமார் 400 பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. 1,700 பேர் காயமடைந்து உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இஸ்ரேல் நாட்டை சேர்ந்த ராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்களை ஹமாஸ் பயங்கரவாதிகள் கடத்திக் கொண்டு சென்றுள்ளதாகவும் இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. மறுபக்கம் ஹமாஸ் பயங்கரவாதிகள் குழு தலைவர் இஸ்மாயில் ஹனியே, அரபு மற்றும் இஸ்லாமிய நாடுகள் இந்த மோதலில் தங்களுடன் இணைய வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார். ஆபரேஷன் அல்-அக்ஸா என சனிக்கிழமை அன்று இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலை ஹமாஸ் பயங்கரவாதிகள் குழு தெரிவித்துள்ளனர்.
நேபாள நாட்டை சேர்ந்த 10 மாணவர்கள் இஸ்ரேலில் கொல்லப்பட்டு உள்ளதாக அந்த நாட்டு தூதரகம் தெரிவித்துள்ளது. பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஒருவரும் இஸ்ரேலில் கொல்லப்பட்டுள்ளார். இந்த சூழ்நிலையில், இஸ்ரேலில் வசிக்கும் இந்தியர்கள் விழிப்புடன் இருக்குமாறும், உள்ளூர் அதிகாரிகளின் அறிவுறுத்தலின்படி பாதுகாப்பு நெறிமுறைகளைக் கடைப்பிடிக்குமாறும் இந்திய தூதரகம் கேட்டுக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *