• Wed. Dec 17th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

விரைவில் மாதந்தோறும் மின்கணக்கீடு திட்டம் அமல்

Byவிஷா

Mar 31, 2025

தமிழ்நாட்டில் மாதந்தோறும் மின்கணக்கீடு திட்டம் அமல் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வீடுகளுக்கு 100 யூனிட் வரை இலவசமாகவும், 500 யூனிட் வரை மானிய விலையிலும் மின்சாரம் வழங்கப்படுகிறது. மின் பயன்பாடு 2 மாதங்களுக்கு ஒருமுறை கணக்கெடுக்கப்படுகிறது. சில ஊழியர்கள் கணக்கெடுக்க தாமதமாக வருவது, வீடுகளுக்கு நேரில் செல்லாமல் உத்தேசமாக கணக்கெடுப்பது போன்ற காரணங்களால் அரசின் சலுகைகளை பெற முடியவில்லை. எனவே, மாதம்தோறும் கணக்கெடுக்கும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று நுகர்வோர் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில், கடந்த 2021 சட்டப்பேரவை தேர்தலின்போது, ‘நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மாதம்தோறும் மின்கணக்கீடு செய்யப்படும்’ என திமுக தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்தது.
ஆனால், இத்திட்டம் இதுவரை செயல்பாட்டுக்கு வரவில்லை. தேர்தலில் வெற்றி பெற்று திமுக ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகள் ஆகியும் இந்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சித்து வருகின்றன. சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு மட்டுமே உள்ளது.
இந்த நிலையில், மாதம்தோறும் மின்பயன்பாடு கணக்கீட்டை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மின்வாரிய அதிகாரிகளை அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவுறுத்தி உள்ளார்.
இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறியதாவது..,
மாதம்தோறும் மின்பயன்பாட்டை கணக்கெடுக்க, 2024 முதல் நடைமுறைக்கு கொண்டு வரும் வகையில் ஸ்மார்ட் மீட்டர் திட்ட பணிக்கு கடந்த 2023-ம் ஆண்டு டெண்டர் கோரப்பட்டது. அதில் பங்கேற்ற நிறுவனங்கள் புதுச்சேரியில் ஸ்மார்ட் மீட்டர் திட்டத்துக்கு குறைந்த விலை புள்ளி வழங்கிய நிலையில், தமிழகத்தில் அதைவிட அதிக விலை புள்ளிகள் வழங்கின. இதனால், ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு, அந்த திட்டம் ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில், தற்போது 3.04 கோடி ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தும் திட்டத்துக்கு டெண்டர் கோரப்பட்டுள்ளது. 3-4 மாதங்களுக்குள் தகுதியான நிறுவனங்களுக்கு பணி ஆணை வழங்கி, மாதம்தோறும் கணக்கீடு செய்யும் திட்டத்தை அடுத்த 6 மாதங்களுக்குள் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் விரைந்து நடந்து வருகின்றன. இவ்வாறு அவர்கள் கூறினர்.