• Wed. May 1st, 2024

வாக்குச்சாவடிகள் வெப் கேமரா மூலம் கண்காணிப்பு

Byவிஷா

Apr 18, 2024

தமிழகத்தில் நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், வாக்குச்சாவடிகள் வெப் கேமரா மூலம் கண்காணிக்கப்படுவதாக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதாசாகு தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதி என மொத்தம் 40 தொகுதிகளில் நாளை (ஏப்ரல் 19 ஆம் தேதி) மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இத்தேர்தலில் 6 கோடியே 23 லட்சத்துக்கும் அதிக வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.
தமிழ்நாட்டில் 3 கோடியே ஆறு லட்சத்துக்கும் அதிக ஆண் வாக்காளர்களும், 3 கோடியே 17லட்சத்துக்கும் அதிக பெண் வாக்காளர்களும், 8,467 மாற்று பாலினத்தவரும் தேர்தலில் வாக்களிக்கத் தகுதி பெற்றவர்களாக உள்ளனர்.
இதுகுறித்து, மாநில தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்ததாவது..,
“இத்தேர்தலையொட்டி தமிழகத்தில் 44,800 வாக்குச்சாவடிகள் வெப் கேமரா முறையில் கண்காணிக்கப்பட உள்ளன. ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் 65சதவீத வாக்குச்சாவடிகள் வெப் கேமரா மூலம் கண்காணிக்கப்பட உள்ளன.
தேர்தல் பணியில் ஈடுபடுபவர்கள் 18ம் தேதி (இன்று) மாலை 6 மணி வரை தபால் வாக்கு அளிக்கலாம். பயிற்சி மையங்களில் வாக்களிக்க முடியாதவர்கள் தேர்தல் நடத்தும் அலுவலரின் அலுவலகங்களுக்கு சென்று தங்களின் தபால் வாக்குகளை பதிவு செய்யலாம்.
தபால் வாக்குகள் ஜுன் 3 ம் தேதி வரை மாவட்ட தேர்தல் அதிகாரிகள் மூலம் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையத்துக்கு அனுப்பி வைக்கப்படும். பத்து வாக்குச்சாவடி மையத்திற்கு ஒரு மண்டல அளவிலான குழு வீதம், 6170 மண்டல குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் உரிய ஆவணங்களின்றி கொண்டுசெல்லப்பட்ட 1,297 கோடி ரூபாய் மதிப்பிலான ரொக்கம், போதை பொருட்கள், தங்கம் உள்ளிட்டவை தேர்தல் ஆணையத்தால் இதுவரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன” என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *