உசிலம்பட்டி அருகே பல ஆண்டுகளாக பேருந்து வசதியின்றி அவதியுற்று வந்த கிராம மக்களின் கோரிக்கையை ஏற்று உசிலம்பட்டி எம்எல்ஏ பேருந்து வசதி ஏற்படுத்தி கொடுத்த சம்பவம் பலரின் பாராட்டை பெற்றுள்ளது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உத்தப்புரத்தை அடுத்துள்ளது சங்கம் கவுண்டன்பட்டி, இக்கிராமத்தில் 300க்கும் அதிகமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

அத்தியாவசிய தேவைக்கும், பள்ளி மாணவ, மாணவிகள் உசிலம்பட்டி மற்றும் பேரையூருக்கு செல்ல பேருந்து வசதி இல்லாத சூழலில் 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள உத்தப்புரத்திற்கு வந்து பேருந்துகளில் ஏறி செல்லும் சூழல் இருந்து வந்துள்ளது.
இக்கிராமம் உருவான நாள் முதல் பல ஆண்டுகளாக பேருந்து வசதியின்றி தவித்து வந்த இம்மக்களின் கோரிக்கையை ஏற்று உசிலம்பட்டி எம்எல்ஏ அய்யப்பன், பேரையூர் அரசு போக்குவரத்து பனிமனையிலிருந்து தினசரி இரு முறை பேருந்து இக்கிராமத்திற்கு வந்து செல்லும்படி வழிவகை செய்துள்ளார்.

இன்று முதல் பேருந்து சேவை துவங்கப்பட்ட சூழலில் உசிலம்பட்டி எம்எல்ஏ அய்யப்பன் நேரில் வந்து கொடி அசைத்து பேருந்து சேவையை துவக்கி வைத்தார்., தொடர்ந்து அதே பேருந்தில் சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் பயண சீட்டு எடுத்து பயணித்த எம்எல்ஏ அருகில் உள்ள கிராம மக்களின் கோரிக்கை மனுக்களையும் பெற்றுக் கொண்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்து சென்றார்.

பல ஆண்டுகளாக பேருந்து வசதியின்றி தவித்து வந்த மக்களுக்கு பேருந்து வசதியை ஏற்படுத்தி கொடுத்த எம்எல்ஏ அய்யப்பனை கிராம மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.








