• Mon. May 6th, 2024

கைக்குழந்தையை பத்திரமாக மீட்ட எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன்..!

Byவிஷா

Dec 19, 2023

தென்மாவட்டங்களில் கனமழை காரணமாக ஆங்காங்கே வெள்ளம் சூழ்ந்துள்ள நிலையில், நெல்லையில் வெள்ளத்தில் சிக்கிய 4 மாத கைக்குழந்தையை பா.ஜ.க எம்.எல்.ஏ நயினார்நாகேந்திரன் பத்திரமாக மீட்டுள்ள வீடியோ சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
வளிமண்டல சுழற்சி காரணமாக தென் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருந்தது. அதன்படியே நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் நேற்று முன் தினம் இரவு மழை பெய்ய தொடங்கியது. முதலில் மெதுவாக பெய்ய தொடங்கிய மழை நேரம் செல்ல செல்ல அதி கனமழையாக கொட்டியது. குறிப்பாக நேற்று காலை முதல் விடாமல் வெளுத்து வாங்கியது.
இரவிலும் கொட்டி தீர்த்த கனமழையால் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு வெளியேற்றப்பட்டனர். நெல்லையின் மாநகரின் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளதால் மக்கள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். சில இடங்களில் கழுத்தளவுக்கு தண்ணீர் நிற்பதால் மக்களை மீட்கும் பணியும் நடைபெற்றது.
விடாது பெய்த மழையால் பல ஊர்கள் தனித்தீவுகள் போல மாறியுள்ளன. சாலைகள் வெள்ளத்தில் அடித்து துண்டிக்கப்பட்டதால் ஊர்களை விட்டு வெளியேற முடியாமல் மக்கள் தத்தளித்து வருகிறார்கள். வெள்ளத்தில் சிக்கிய மக்களை மீட்கும் பணியில் தன்னார்வலர்களும் பேரிடர் மீட்பு குழுவினரும் ஈடுபட்டுள்ளனர். அரசு அதிகாரிகளும் மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.
நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் எங்கு பார்த்தாலும் தண்ணீராய் காட்சி அளிக்கிறது. மின் தடையும் ஏற்பட்டுள்ளதால் தொலைத்தொடர்பும் பாதிக்கப்பட்டு உள்ளது. இதனிடையே, வெள்ளத்தில் சிக்கிய 4 மாத குழந்தையை பாஜக எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன் மீட்டுள்ளார். நெல்லையில் உள்ள பஞ்சமுக ஆஞ்சநேயர் கோயில் அருகில் வெள்ளத்தில் தத்தளித்த இசக்கிமுத்துவின் குடும்பத்தினர் மற்றும் அவர்களின் பேரன் சிவகிருஷ்ணன் 4 மாத குழந்தையை நயினார் நாகேந்திரன் பத்திரமாக மீட்டார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *