மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மூப்பபட்டி கிராமத்தின் அருகாமையில் மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரின் சுமார் 2 ஆயிரம் அடி உயரத்தில் உள்ள மலையில் அமைந்துள்ளது மீனாட்சியம்மன் திருக்கோவில்.

மதுரை அரசியாக பொறுப்பேற்கும் முன், மதுரையை ஆண்ட மீனாட்சியம்மன் தனது சிறுவயதில் இந்த மலைப்பகுதியில் மக்களோடு மக்களாக வாழ்ந்து மக்கள் சந்திக்கும் பிரச்சினைகளை அறிந்து பிரச்சினைகள் குறைகளை தீர்த்து வைத்தாகவும், அதன் நினைவாகவே இப்பகுதி மக்கள் இந்த மலை உச்சியில் கோவில் எழுப்பி வழிபாடு செய்து வருவதாக கோவில் வரலாறாக கூறப்படுகிறது.
ஒவ்வொரு மாத பௌர்ணமி, அம்மாவாசை மற்றும் ஆடி 18, மாசி சிவராத்திரி, புரட்டாசி மாதங்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும் சூழலில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் இக் கோவிலுக்கு மலை ஏறி மீனாட்சியம்மனை வழிபடுவது வழக்கமாக கொண்டுள்ளனர்.
இந்த கோவிலில் ஆனி மாத பௌர்ணமியை முன்னிட்டு உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் அய்யப்பன், தனது ஆதரவாளர்களுடன் 2 ஆயிரம் அடி உயரத்தில் மலை உச்சியில் உள்ள இந்த மீனாட்சியம்மன் கோவிலில் பொங்கல் வைத்து சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடு செய்தார்.
மேலும் இக் கோவிலில் சோலார் மின் விளக்குகள், பக்தர்கள் தங்கும் கூடம் மற்றும் கோவிலுக்கு செல்லும் பாதையை சீரமைக்க வனத்துறையினர் உதவியுடன் நடவடிக்கைகள் எடுப்பதாகவும் எம்எல்ஏ அய்யப்பன் தெரிவித்துள்ளது. உசிலம்பட்டி பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.








