• Thu. Oct 9th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

நம்முடைய நியாயமான கோரிக்கைகள் நிச்சயம் வெற்றியடையும்- மு.க.ஸ்டாலின் நம்பிக்கை!

ByP.Kavitha Kumar

Mar 21, 2025

நம்முடைய நியாயமான கோரிக்கைகள் நிச்சயம் வெற்றியடையும். நம்முடைய இந்த முன்னெடுப்பு இந்தியாவைக் காக்கும் என்று சென்னையில் நாளை நடைபெற உள்ள ஆலோசனை கூட்டம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

மக்களவை தொகுதி மறுவரையறையால் தமிழகம் பாதிக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இது தொடர்பாக நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் தொகுதி மறுவரைக்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்தின்படி சென்னையில் நாளை (மார்ச் 22) கூட்டு நடவடிக்கைக்குழு தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.

இந்த கூட்டம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில், ” தொகுதி மறுவரையறை. இதுதான் இப்போது பேசுபொருளாக உள்ளது. திமுக ஏன் இதை பேசுபொருளாக்கியது என்றால், 2026-ல் தொகுதி மறுவரையறை கண்டிப்பாக நடந்தே ஆக வேண்டும். அப்போது, மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு செய்தால் தமிழ்நாட்டில் எம்.பி. தொகுதிகள் எண்ணிக்கை குறையும். தொகுதிகள் எண்ணிக்கை குறைந்துவிடும் என்று உணர்ந்துதான் நாம் முதலில் குரல் எழுப்பியுள்ளோம். இது எம்.பி.க்கள் எண்ணிக்கை சார்ந்த பிரச்சினை மட்டும் கிடையாது. நமது மாநிலத்தின் உரிமை சார்ந்த பிரச்சினை.

அதனால் தான் தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் கட்சிகளையும் அழைத்து கூட்டம் நடத்தினோம். பாஜக தவிர மற்ற எல்லா கட்சியினரும் ஓரணியில் நின்று நியாயமான தொகுதி மறுவரையறை வேண்டும் என்று ஒரு தீர்மானம் நிறைவேற்றினோம். அதில் இந்த தொகுதி மறுவரையறையால் பாதிக்கப்படக் கூடிய மற்ற மாநிலங்களையும் ஒருங்கிணைத்து போராட முடிவு செய்தோம்.

அதற்காக ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தெலங்கானா, ஒடிசா, பஞ்சாப், மேற்குவங்கம் ஆகிய 7 மாநிலங்களின் முதல்வர்களுக்கும், நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் உள்ள எல்லா கட்சிகளின் தலைவர்களுக்கும் நான் கடிதம் எழுதினேன். அந்தக் கடிதங்களை ஒரு அமைச்சர் மற்றும் ஒரு எம்.பி. அடங்கிய குழுவினர் நேரில் சந்தித்து விளக்கம் அளித்தனர். நானே அவர்களுடன் தொலைபேசியிலும் பேசினேன். சிலர் நேரடியாக வர ஒப்புக் கொண்டனர். சிலர் ஏற்கனவே ஒப்புக் கொண்ட நிகழ்ச்சிகளால் பிரதிநிதிகளை அனுப்பிவைப்பதாகக் கூறினர்.

இந்த முதற்கட்ட ஆலோசனைக் கூட்டம் நாளை மார்ச் 22 சென்னையில் நடக்கவிருக்கிறது. இப்போது இந்தக் கூட்டத்துக்கு அவசியம் எனனவென்று பலரும் கேட்கிறார்கள். தொகுதி மற்வரையறையால் தமிழ்நாடும் நாம் அழைத்துள்ள மாநிலங்களும் பாதிக்கப்பட்டால் இந்திய நாட்டில் கூட்டாட்சிக்கான பொருள் இருக்காது. ஜனநாயகத்துக்கு மதிப்பு இருக்காது. நாடாளுமன்றத்தில் நம் குரல்கள் நசுக்கப்படும். நம் குரல்களை நிலைநாட்ட முடியாது. இது இந்த மாநிலங்களை அவமதிக்கும் செயல். எனவே மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தி நாட்டின் வளர்ச்சிக்கு சிறப்பாக பங்களிப்பு செய்த மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு தண்டனை கொடுக்கக் கூடாது. அதனால்தான் தமிழ்நாட்டில் இருக்கும் பெரும்பாலான கட்சிகளுடைய ஒருங்கிணைந்த சிந்தனையின்படி மற்ற மாநிலங்களை ஒருங்கிணைக்கும் இந்தக் கூட்டம் நடைபெறப் போகிறது.

இந்தக் கூட்டத்தில் ஒரு முடிவு எடுக்கப்படும். அதன் அடிப்படையில் அடுத்தக் கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வோம். நம்முடைய நியாயமான கோரிக்கைகள் நிச்சயம் வெற்றியடையும். நம்முடைய இந்த முன்னெடுப்பு இந்தியாவைக் காக்கும்” என்று பேசியுள்ளார்.