• Sat. Apr 20th, 2024

பரங்கிப்பேட்டை ரயில் நிலையத்தின் அவல நிலை …கண்டும் காணாமல் இருக்கும் அதிகாரிகள்..

Byகாயத்ரி

Jan 29, 2022

பரங்கிப்பேட்டை ரயில் நிலையத்திற்கு மட்டும் ஏன் இந்த அநியாயம்? – அலட்சியத்தில் பல அரசியல்வாதிகள், ஆணவத்தில் பல அதிகாரிகள், ஊமையாகிப் போன பல ஊடகங்கள், செய்வதிறியாத நிலையில் பொதுமக்கள்¡

இந்திய ரயில்வே, தமிழகத்தின் பல்வேறு ரயில் கோரிக்கைகளை தொடர்ந்து புறக்கணித்து வருவதை கண்டு மக்கள் தம்முடைய ஆதங்கத்தை வெளிப்படுத்துகின்றனர். வடமாநிலங்கள், கேரளா, ஆந்திர மாநிலஙகளில் உள்ளதைப் போன்று அதிகளவு ரயில்வே சேவைகள் தமிழ்நாட்டில் இல்லை என்பது அனைவருக்கும் தெரிந்த செய்தி.

அதே அடிப்படையில், தென்னக ரயில்வே, திருச்சி கோட்டம் அனைத்து ரயில் நிலையங்களை விட பரங்கிப்பேட்டை ரயில் நிலையத்தை முற்றிலுமாக தொடர்ந்து புறக்கணித்து வருவதற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. ரயில் நிலையங்களின் தரங்களை பிரிப்பதற்காக பல்வேறு படித்தரங்களை வைத்திருக்கின்றது ரயில்வே துறை. அனைத்து ரயில் நிலையங்களும் அந்த தரத்திற்கு உட்படுத்தப்பட்டுதான் தரவிறக்கமோ அல்லது அல்லது தர உயர்வோ செய்யப்படுகின்றது. அந்த அடிப்படையில் அந்தந்த ரயில் நிலையங்களில் பல்வேறு வசதிகள் செய்யப்படுகின்றன.

ஆனால், உண்மையில் தரம் பிரிக்கப்படும் நிபந்தனைகளின் அடிப்படையில்தான் திருச்சி கோட்டம் ரயில் நிலையங்களை தரம் பிரித்துள்ளதா? என்பது மில்லியன் டாலர் கேள்வி. காரணம், இத்துடன் இணைக்கப்பட்டுள்ள தகவலின் அடிப்படையில், ஒரு சில ரயில் நிலையங்கள் எடுத்துக் கொண்டாலும் கூட தரம் பிரிக்கப்படுவதற்குண்டான நிபந்தனைகள் அடிப்படையில் அனைத்து ரயில்களும் அனைத்து ரயில் நிலையங்களும் பிரிக்கப்படவில்லை என்பதுதான் உண்மை.

பரங்கிப்பேட்டை ரயில் நிலையம் மட்டும் குறிப்பிட்டு தரவிறக்கம் செய்யப்பட்டுள்ளது (நீடுர் ரயில் நிலையமும் தரவிறக்கம் செய்யப்பட்டுள்ளது கூடுதல் தகவல்). அதிலும், ஐந்தாண்டுகள் முடிந்த பிறகே தர மதிப்பீடு செய்யப்பட வேண்டும் என்ற ஒரு சட்டம் உள்ளது. ஆனால், பரங்கிப்பேட்டை ரயில் நிலையத்தை, பயணிகள் வருகை மற்றும் ஆண்டு வருமானம், பிற ரயில் நிலையங்களை விட அதிகமாக இருந்தும் இரண்டாண்டுகளுக்குள் தரவிறக்கம் செய்யப்பட்டுள்ளது. பிற ரயில் நிலையங்களில் வருமானமும் பயணிகளின் எண்ணிக்கையும் குறைவாக இருப்பினும் அவை அந்தந்த தரத்திலேயே வைக்கப்பட்டுள்ளன.

ஏன், பரங்கிப்பேட்டை ரயில் நிலையம் மட்டும் தரவிறக்கம் செய்யப்பட்டு கொண்டே இருக்கின்றது என பலமுறை பல நபர்கள் பல வடிவங்களில் இது குறித்து தகவல் கேட்டால், அதற்கு தென்னக ரயில்வேயின் திருச்சி கோட்டம் பதில் தர முடியாது, அதற்கான காரணத்தைச் சொல்ல முடியாது என்று பிடிவாதமாக உள்ளது. மேல் முறையீடுகள் செய்தும் ப(ய)லனில்லை. நமக்கும் அது ஏன் என்று புரியவில்லை.

எனவே, பிற ரயில் நிலையங்கள் எப்படி கவனத்தில் எடுத்துக்கொள்ளப் படுகின்றதோ அதேபோன்றுதான் பரங்கிப்பேட்டை ரயில் நிலையமும் கவனிக்கப்பட வேண்டும். இதற்கென்று தனிப்பட்ட சலுகைகளையோ, விதிவிலக்குகளையோ கேட்கவில்லை. அனைத்து ரயில் நிலையங்களும் எப்படி கவனிக்கப்படுகின்றதோ அப்படி கவனித்தாலே போதும், மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடக்க வேண்டாம் என்பதுதான் நம்முடைய கோரிக்கை.

எனவே, இது குறித்து சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்கள், மக்கள் நல சேவகர்கள், அரசு அதிகாரிகள், ஊடகங்கள் உடனடியாக நடவடிக்கை எடுத்து பரங்கிப்பேட்டை ரயில் நிலையத்தின் தரத்தை உயர்த்துவதற்கும், அதனுடைய பாரம்பரியத்தை மீட்பதற்கும், அங்கு தேவைப்படும் அனைத்து வசதிகளும் செய்யப்படுவதற்கும் ஆவண செய்யுமாறு பரங்கிப்பேட்டை மற்றும் சுற்றுவட்டார பொதுமக்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *