தாம்பரம் சானிட்டோரியத்தில் செங்கல்பட்டு மாவட்ட தலைமை மருத்துவமனை 115.38 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இந்த அரசு மருத்துவமனையை வரும் ஒன்பதாம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் நேரடியாக சென்று திறந்து வைக்க உள்ளார்,

இதன் காரணமாக முதலமைச்சர் மு க ஸ்டாலின் நேரடியாக சென்று இந்த மருத்துவமனை திறந்து வைக்க இருப்பதால் மருத்துவமனை வளாகத்தில் விழா மேடை அரங்குகள் அமைக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் இன்று பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ.வா. வேலு, சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சர் தாமோ. அன்பரசன் ஆகியோர் முதலமைச்சர் மு க ஸ்டாலின் கலந்து கொள்வதற்காக மருத்துவமனை வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அரங்கத்தினை ஆய்வு செய்தனர்.
மேலும் முதலமைச்சர் கலந்து கொள்வதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர். மேலும் கட்டி முடிக்கப்பட்டுள்ள மருத்துவமனை முழுவதும் சென்று ஆய்வு செய்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர். ஏற்கனவே சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியனும் இந்த மருத்துவமனையை முழுவதும் ஆய்வு செய்து இருந்தார்,
ஆய்வுக்குப் பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ வா வேலு கூறுகையில், இரண்டு லட்சம் சதுர அடியில் ஏழு மாடிகள் கொண்ட மருத்துவமனை சுமார் 115 கோடியில் கட்டப்பட்டுள்ளது இதில் 400 படுக்கை வசதிகள் உள்ளன ஆறு அறுவை சிகிச்சை கூடம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் சிறப்பு சிகிச்சை பிரிவுகள் குழந்தைகள் நலன் மற்றும் நீரிழிவு போன்றவர்களுக்கான சிகிச்சை பிரிவு அமைக்கப்பட்டுள்ளது.

மருத்துவமனையில் சிடி ஸ்கேன் வசதி செய்யப்பட்டுள்ளது இந்த சிறப்பு மிகுந்த மாவட்ட மருத்துவமனையை வருகிற ஒன்பதாம் தேதி காலை 10 மணியளவில் தமிழக முதல்வர் திறந்து வைப்பார் என தெரிவித்தார். ஆய்வின் போது உடன் தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ் ஆர் ராஜா பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் இ கருணாநிதி தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி துணை மேயர் காமராஜ் மாவட்ட ஆட்சியர் சினேகா மண்டல குழு தலைவர் காமராஜ் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.