சிவகாசியில் சுற்றுவட்ட சாலை அமைக்க அடிக்கல் நாட்டு விழா. சிவகாசியில் சுற்றுவட்ட சாலை பணிக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு அடிக்கல் நாட்டினார். விருதுநகர் மாவட்டத்தில் தொழில் நகரமாக விளங்கும் சிவகாசியில் பட்டாசு, தீப்பெட்டி, அச்சகம், என பல்வேறு தொழில்கள் அடங்கியுள்ளது .உற்பத்தி செய்யப்படும் பொருட்களை கொண்டு செல்வதற்கும் உற்பத்தி தேவையான மூலப்பொருட்களை கொண்டு வருவதற்கும் தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கனரக வாகனங்கள் சிவகாசி திருத்தங்கல் வந்து செல்கிறது.

வெளியூரில் இருந்து வரும் கனரக வாகனங்களை நிறுத்துவதற்கு போதிய வசதி இல்லாததால் அவ்வப்போது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனை தவிர்க்கும் வகையில் சிவகாசி திருத்தங்கல் நகரில் வெளியே சுற்றுச்சாலை அமைக்க வேண்டுமென பல ஆண்டுகள் கோரிக்கையை நிறைவேற்றுவதற்காக 2013இல் சுற்றுச்சாலை அமைக்க அறிவிப்பு வெளியிடப்பட்டது .அப்போது முதல் சாலை விரிவாக்கத்திற்கு பல்வேறு பணிகள் நடைபெற்ற நிலையில் சுற்றுச்சாலை திட்டப்பணிகள் 3 கட்டங்களாக நடைபெற முடிவு செய்யப்பட்டன.

முதல் கட்டமாக ஸ்ரீவில்லிபுத்தூர் விருதுநகர் சாலை இணைக்கும் பகுதியில் பூவநாதபுரம் விலக்கில் இருந்து வடமலாபுரம் வரை 10 கிலோ மீட்டர் தொலைவிற்கு சுற்றுச்சாலை அமைக்க சுக்ரவார்பட்டி அருகே சாலையில் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. அமைச்சர் தங்கம்தென்னரசு தலைமை தாங்கி தொடங்கி வைத்தார் .நிகழ்ச்சியில் விருதுநகர் மாவட்ட கலெக்டர் ஜெயசீலன், சிவகாசி சட்டமன்ற உறுப்பினர் அரசன் அசோகன், சிவகாசி மாநகராட்சி மேயர் சங்கீதா இன்பம், சிவகாசி திமுக நகர செயலாளர் உதயசூரியன் திருத்தங்கல் சக்திவேல், மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.