• Thu. Oct 9th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

தமிழர்களுக்கு ஆளுநர் பாடம் எடுக்க வேண்டாம்- அமைச்சர் ரகுபதி பதிலடி

ByP.Kavitha Kumar

Feb 28, 2025

தமிழ்நாடு அடைந்திருக்கும் வளர்ச்சி இருமொழிக் கொள்கையினால் சாதித்தவை என அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார்.

தமிழ்நாட்டில் தேசிய கல்விக் கொள்கை 2020 -ஐ அமல்படுத்துவதற்கு பெரும் தேவை உள்ளது என்று ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று கருத்து தெரிவித்திருந்தார். இது தொடர்பாக அவரது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், “ மாநில அரசின் கடுமையான இரு மொழிக் கொள்கை காரணமாக அண்டை மாநிலங்களைச் சேர்ந்த இளைஞர்களுடன் ஒப்பிடும்போது இந்த பிராந்திய இளைஞர்கள் வாய்ப்புகளை இழந்தவர்களாக உணர்கிறார்கள்.
துரதிருஷ்டவசமாக இந்தியை எதிர்க்கிறோம் என்ற பெயரில் எந்தவொரு தென்மாநில மொழிகளையும் கூட படிக்க அனுமதிக்கப்படாதவர்களாக அவர்கள் உணர்கிறார்கள். இது உண்மையிலேயே நியாயமற்றது, மொழியைப் படிப்பதற்கான தேர்வு நமது இளைஞர்களுக்கு இருக்க வேண்டும்” என்று அவர் கூறியிருந்தார்.

இந்த நிலையில் ஆளுநருக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், அமைச்சர் ரகுபதி அவரது எக்ஸ் தளத்தில் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில்,
“தமிழ்நாடு பொருளாதாரத்திலும் கல்வியிலும் பெற்றிருக்கும் வளர்ச்சியை பொறுக்க முடியாமல் தமிழ்நாட்டின் மீது வெறுப்பை உமிழ்வதையே தனது கடமையெனக் கருதி செயலாற்றி வருகிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி. தனது அரசியலமைப்பு கடமைகளை மறந்து ஆதாரமற்ற அவதூறுகளை வைத்து அரசியலை செய்வதற்காகவே மத்திய பாஜக அரசு ஆர்.என்.ரவியை ஆளுநராக வைத்திருக்கிறது.

தனது சமூக வலைதளக் கணக்கை இதற்காகவே பிரதானமாக பயன்படுத்திவரும் ஆளுநர் ரவி தனது இன்றையப் பதிவில்,’இந்தப் பகுதி, மனித ஆற்றல் மற்றும் இயற்கை வளங்களால் நிறைந்துள்ளது, ஆனாலும் இது புறக்கணிக்கப்பட்டு பின்தங்கியுள்ளது போன்ற உணர்வைத் தருகிறது. தொழில்மயமாக்கலுக்கான மிகப்பெரிய சாத்தியக்கூறுகள் இருந்தபோதிலும், இங்குள்ள மக்கள் வாய்ப்புகள் புறக்கணிக்கப்பட்டவர்களாக உணர்கிறார்கள்’ எனக் கூறியிருக்கிறார்.

தமிழ்நாடு எதில் பின் தங்கியுள்ளது என ஆளுநர் ரவியால் சொல்ல முடியுமா?கல்வியில், மருத்துவத்தில், பொருளாதாரத்தில் தமிழ்நாட்டின் வளர்ச்சி இந்திய மாநிலங்கள் எதனோடும் ஒப்பிட முடியாத அளவிற்கு வளர்ச்சியடைந்திருக்கிறது என்பதை மத்திய அரசு வெளியிட்டிருக்கும் புள்ளிவிவரங்களே சொல்லும், அதையெல்லாம் ஆளுநர் ரவி படித்தால்தானே? படித்தாலும் அவரின் கண்களுக்கு அவையெல்லாம் எப்படித் தெரியும்? தமிழ்நாடு அடைந்திருக்கும் வளர்ச்சி இருமொழிக் கொள்கையினால் சாதித்தவை, தமிழ்நாட்டில் எப்படியாவது இந்தியை திணிக்கலாம் அதற்கு புதிய கல்விக் கொள்கையை ஒரு வழியாக வைத்து உள்நுழையலாம் எனும் சதியை அறியாதவர்களா தமிழர்கள்?

தமிழ்-தமிழ்நாடு-தமிழ்த்தாய் வாழ்த்து ஆகியவற்றின் மீது தொடர்ந்து வெறுப்பை உமிழும் ஆளுநர் ரவி தமிழர்களுக்கு மொழியுணர்ச்சியை பற்றி பாடம் எடுக்க வேண்டாம். சனாதனத்தையும் சமஸ்கிருதத்தையும் தமிழ்நாட்டில் காலூன்றச் செய்திட ஆளுநர் முயற்சிக்கிறார். மொழித் தேர்வு எது? மொழித் திணிப்பு எது? என்பது எங்களுக்கு தெரியும்” என்று தெரிவித்துள்ளார்.