மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடம், புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி வட்டம், கூடலூர் கிராம மாணவர்கள், பனையப்பட்டி, குழிபிறை ஆகிய ஊர்களுக்கு பள்ளி நேரங்களில் பேருந்து வசதி வேண்டும் என சமூக ஊடகங்களின் மூலம் கேட்டுக் கொண்டதன் அடிப்படையில், மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின்; உத்தரவுப்படி தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கும்பகோணம் (கோட்டம்), புதுக்கோட்டை மண்டலம், பொன்மராவதி கிளை சார்பில் பொன்னமராவதி முதல் கூடலூர் கிராமத்திற்கு புதிய பேருந்து வழித்தட நீட்டிப்பு வசதியினை மாண்புமிகு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் திரு.ஜா.முகமது பர்வேஸ் அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்து, கூடலூரிலிருந்து பனையப்பட்டி பள்ளி வரை மாணவர்களுடன் 6 கி.மீ பயணம் செய்தார்.

சிறப்பு பேருந்து வசதி கிடைக்க வழிவகை செய்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கும், மாண்புமிகு போக்குவரத்து துறை அமைச்சர் அவர்களுக்கும், மாண்புமிகு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் அவர்களுக்கும் பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் நன்றி தெரிவித்தனர்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.மு.அருணா, இ.ஆ.ப., அவர்கள், புதுக்கோட்டை மண்டல மேலாளர் திரு.முகமதுநாசர் அவர்கள், மாவட்ட கல்வி அலுவலர் திருமதி.புஷ்ப லதா அவர்கள், துணை மேலாளர் (வணிகம்) திரு.கார்த்திகேயன் அவர்கள், பொன்னமராவதி கிளை மேலாளர், கல்வித்துறை அலுவலர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள்; மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.





