சென்னையில் மினி பஸ்கள் குறைந்த அளவிலேயே இயக்கப்பட்டு வருவதால், மெட்ரோ ரெயில் பயணிகளை ஏற்றிச் செல்வதற்காக கூடுதல் மினி பஸ்கள் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது.
சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தில் உள்ள 210 மினி பஸ்களில் 66 மினி பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டு வருவதாகவும், இதனால் சென்னையில் மினி பஸ் பயணிகளின் பயன்பாடு குறைந்து, நிதி இழப்பு ஏற்பட்டதால் மீதமுள்ள 144 மினி பஸ்கள் இயக்கப்படாமல் நிறுத்தப்பட்டுள்ளதாகவும், தெரிவிக்கப்பட்டது. தற்போது இந்த மினி பஸ்களை சிறந்த முறையில் பயன்படுத்திட பிற பகுதிகளிலிருந்து மெட்ரோ ரெயில் நிலையங்களுக்கு இயக்கிட உத்தேசிக்கப்பட்டுள்ளது.
எனவே, சென்னை மெட்ரோ ரெயில் நிலையங்களில் இருந்து 12 மினி பஸ்கள் சேவையை முதலமைச்சர் இன்று தொடங்கி வைக்கிறார். ஆலந்தூர், விமான நிலையம், கோயம்பேடு, திருவொற்றியூர் மெட்ரோ ரயில் நிலையங்களில் மினி பஸ்கள் இயக்கப்பட உள்ளது.