கழுகுமலை அருகே உள்ள தெற்கு கழுகுமலை நாடார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட ஆதிபராசக்தி மாரியம்மன் கோவில் பொங்கல் விழா கடந்த 1 ம் தேதி தொடங்கியது. விழா நாட்களில் தினமும் காலை, மாலை நேரங்களில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. 7 ம் தேதி மாக்காப்பு சாத்தி விசேஷ பூஜை நடந்தது. 8 ம் தேதி காலை 8 மணிக்கு பால்குடம் எடுத்து வந்து அம்மனுக்கு பாலாபிஷேகம் மற்றும் அதை தொடர்ந்து 1 மணிக்கு கோயில் முன்பு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை 4 மணிக்கு குற்றாலம், மதுரை, கழுகுமலை உள்ளிட்ட புண்ணிய ஸ்தலங்களில் இருந்து வான வேடிக்கை முழங்க தீர்த்தக்குடம் எடுத்து வந்து அம்மனுக்கு அபிஷேகம் நடந்தது. இரவு 7 மணிக்கு கும்பிடு சேவை, 9 மணிக்கு கோவில்பட்டி இனாம் மணியாச்சி கணேஷ்பாலகன் குழுவினரிள் வில்லிசை நிகழ்ச்சி நடந்தது. நள்ளிரவு 12 மணிக்கு சாமகொடை பூஜை நடந்தது. 9 ம் தேதி காலை 7 மணிக்கு பொங்கலிடுதல் மற்றும் முடி காணிக்கை செலுத்தும் நிகழ்ச்சி, மாலை 5 மணிக்கு முளைப்பாரி ஊர்வலம், 6 மணிக்கு அம்மன் அக்கினி சட்டி எடுத்து வலம் வருதல், 7 மணிக்கு வண்ணமயமான வான வேடிக்கை நிகழ்ச்சி நடக்கிறது. இரவு 9மணிக்கு திரைப்பட மெல்லிசை விருந்து நடக்கிறது. 10 ம் தேதி 1 மணியளவில் மஞ்சள் நீராட்டத்துடன் விழா முடிவடைகின்றது.திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்து வருகின்றனர். ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் அம்பலகாரர் தனுஷ்கோடி நாடார், நாட்டாமை குமார் நாடார், தலைவர் சோலையப்ப நாடார், செயலாளர் குருசாமி நாடார், துணை தலைவர் கணேஷ் பாபு, இணை செயலாளர் காளிராக் நாடார், துணைசெயலாளர் வெற்றி வேல் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் செய்திருந்தனர்.