தமிழ்க் கடவுள் முருகப்பெருமானை வழிபடுவதற்கு உகந்த நாட்களில் மிக முக்கியமான நாள் வைகாசி விசாகம். வைகாசி மாதத்தில் வரும் விசாக நட்சத்திரத்தில் இந்த விழா கொண்டாடப்படுகிறது. பெரும்பாலான முருகன் கோவில்களில் வைகாசி விசாகம் 10 நாள் விழாவாகக் கொண்டாடப்படுகிறது.

வைகாசி விசாகத்தன்று பக்தர்கள் பால் குடம் மற்றும் காவடிகளை ஏந்தி முருகன் கோவில்களுக்கு சென்று தரிசனம் செய்வது வழக்கம். அவ்வகையில் இந்த ஆண்டு வைகாசி விசாகம் நடைபெற்று வருகிறது. இதையொட்டி கோவில்களில் திருவிழா களைகட்டி உள்ளது. பக்தர்கள் சாரை சாரையாக கோவில்களுக்கு சென்று முருகப்பெருமானை தரிசனம் செய்தவண்ணம் உள்ளனர்.
அதில் ஒரு பகுதியாக அறுபடை வீடுகளில் முதல் படை வீடான மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசாமி திருக்கோவிலில் வைகாசி விசாக பால்குட உற்சவ விழா சிறப்பாக நடைபெற்றது. அதிகாலை முதலே சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆண்கள் பெண்கள் என பக்தர்கள் லட்சக்கணக்கானோர் மதுரை உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து அழகு குத்தியும் காவடி எடுத்தும் பால்குடம் எடுத்தும் பாதயாத்திரையாக நடந்து வந்து தரிசனம் செய்தனர்.

திருப்பரங்குன்றம் சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் அறங்காவலர் சண்முகசுந்தரம் குடும்பத்தினர் பால்குடம் எடுத்து வந்து நேர்த்தி கடன் செலுத்தினார். பக்தர்கள் நேர்த்திக்கடனாக செலுத்திய பால் குடம் குடமாக உற்சவ மூர்த்தியான வள்ளி தேவசேனா சுப்பிரமணிய சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.
வைகாசி விசாக உற்சவ விழாவை முன்னிட்டு திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசாமி கோவில் சார்பிலும் மாநகராட்சி மற்றும் காவல்துறை சார்பிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.