• Wed. May 1st, 2024

எம்.ஜி.கே.மேனன், பிறந்த தினம் இன்று (ஆகஸ்ட் 28, 1928)…

ByKalamegam Viswanathan

Aug 28, 2023

எம்.ஜி.கே. மேனன் (Mambillikalathil Govind Kumar Menon) ஆகஸ்ட் 28, 1928ல் கர்நாடக மாநிலம் மங்களூரில் பிறந்தார். கேரளாவைப் பூர்வீகமாகக் கொண்டவர். மாம்பிள்ளிகளத்தில் கோவிந்தகுமார் மேனன் என்பது முழுப்பெயர். தந்தை, மாவட்ட நீதிபதி. இதனால், பல ஊர்களுக்கும் மாறிக்கொண்டே இருந்தது குடும்பம். கர்னூல், கடலூரில் ஆரம்பக்கல்வி பயின்றார். ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் தொடர்ந்து பயின்றார். 1942ல் மெட்ரிக் தேர்ச்சிபெற்றார். இளம் வயதில் தந்தையுடன் சென்று சர். சி.வி.ராமனைச் சந்தித்த பிறகு, அவரை ஆதர்ஷ நாயகனாகக் கொண்டார். ஆக்ரா பல்கலைக்கழகத்தில் இயற்பியலில் பட்டம் பெற்றார். மும்பை ராயல் சயின்ஸ் இன்ஸ்டிடியூட்டில் முதுநிலை பட்டம் பெற்றார். நிறமாலையியலில் ஆராய்ச்சி மேற்கொண்டார். கொல்கத்தாவில் உள்ள இந்தியப் புள்ளியியல் நிறுவனத் தலைவராகப் பணியாற்றினார்.

டாடா ஆராய்ச்சி நிறுவனம் தொடங்கப்பட்டபோது ஹோமிபாபாவின் அழைப்பை ஏற்று, அதில் இணைந்தார். விண்வெளிக்கு கருவிகளைக் கொண்டுசேர்க்கும் பிளாஸ்டிக் பலூன்களைத் தயாரிக்கும் ஆராய்ச்சிகளில் ஈடுபட்டார். இதுவே விண்வெளித் துறையில் இந்தியாவின் முன்னோடி ஆய்வுத் திட்டம். 1953ல் நோபல் பரிசு பெற்ற சிசில் எஃப். பவலின் வழிகாட்டுதலின் கீழ், காஸ்மிக் கதிர்கள் பற்றி ஆய்வு செய்து, இங்கிலாந்தின் பிரிஸ்டல் பல்கலையில் முனைவர் பட்டம் பெற்றார். காஸ்மிக் கதிர்கள், துகள் இயற்பியல் துறையில் இவரது ஆராய்ச்சிகள் முக்கியத்துவம் வாய்ந்தவை. பூமிக்கு அடியில் மிக ஆழமான பகுதியில் காஸ்மிக் கதிர்கள் எவ்வாறு இயங்குகின்றன என்ற ஆய்வில் ஈடுபட்டார். கோலார் தங்கச் சுரங்கத்தில் ஆழமான பகுதியில் அக்கதிர்களைச் செலுத்தி, அதன்மூலம் வெளியான நியூட்ரினோக்களை ஆராய்ந்தார்.

ஆராய்ச்சி அறிவுடன், அனைவரையும் அரவணைத்துச் செல்லும் குணம், சிறந்த தலைமைப் பண்பும் கொண்டிருந்ததால், மிக குறுகிய காலத்தில் டாடா ஆராய்ச்சி நிறுவனத்தில் டீன் பொறுப்பிலும், துணை இயக்குநர் பொறுப்பிலும் நியமிக்கப்பட்டார். டாட்டா அடிப்படை ஆராய்ச்சி நிறுவனத்தை ஹோமி பாபாவுக்குப் பிறகு வளர்த்தெடுத்தார். இவரது அயராத முயற்சியால் உயிரி அறிவியல், வானொலி விண்ணியல், திடநிலை மின்னணுவியல், புவி இயற்பியல் ஆகிய துறைகளில் டாடா நிறுவனம் அபார வளர்ச்சி பெற்றது. மனித உழைப்பு என்கின்ற விசாலமான ஸ்பெக்ட்ரத்தை, விஞ்ஞான ரீதியாகப் பயன் படுத்தினால் எவ்வளவு அழகாக எதையும் படைக்க முடியும் என்பதை பௌலினிடம் கற்றார். அதுபோல் சரியான திட்டமிடல், ஒரே கருத்துடையவர்களின் ஒத்துழைப்பு, குறிப்பிட்ட பணிக்காகத் தேர்ந்தெடுக்கப்படும் சரியான இடம் போன்றவற்றின் உதவியால் வெற்றிகரமான ஆராய்ச்சியை இந்தியாவில் சாத்தியமாக்கலாம் என்பதை ஹோமி பாபாவிடம் இருந்து கற்றுக்கொண்டார்.

நியூட்ரினோ தொடர்பான ஆராய்ச்சியில் பல முக்கிய முடிவுகளை இவரது குழு கண்டறிந்தது. அண்டக்கதிர்கள் மோதும்போது, உருவாகும் ‘மியான்’ என்ற புதிய நுண்துகள் கண்டறியப்பட்டது. இதுதொடர்பான தகவல்கள் சர்வதேச அண்டக்கதிர் ஆராய்ச்சி மாநாட்டில் ஆய்வறிக்கையாக சமர்ப்பிக்கப்பட்ட பிறகு, உலக அளவில் நியூட்ரினோ ஆராய்ச்சிகள் தீவிரமடைந்தன. 1966ல் ஹோமிபாபா இறந்த பிறகு, அவர் வகித்த பொறுப்பில் இவர் நியமிக்கப்பட்டார். ஹோமிபாபா, ஜாம்ஷெட்ஜி டாடாவின் தொலைநோக்குத் திட்டங்களை நிறைவேற்றினார். 1972ல் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் தலைவரானார். அங்கு 9 மாதங்களே பணியாற்றினாலும் ஆழமான முத்திரையைப் பதித்தார். மத்திய திட்டக்குழுவில் பிரதமரின் அறிவியல் ஆலோகராகவும் செயல்பட்டார். நான்கு தசாப்தங்களாக இந்தியாவில் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியில் அவருக்கு முக்கிய பங்கு இருந்தது.

பத்மஸ்ரீ (1961), பத்மபூஷண் (1968), பத்மவிபூஷன் (1985), சாந்தி ஸ்வரூப் பட்நாகர் விருது, பிரிட்டனின் எஃப்ஆர்எஸ் விருது என பல விருதுகளைப் பெற்றார். 2008ல் செலுத்தப்பட்ட செயற்கைக்கோளுக்கு ‘7564 கோகுமேனன்’ எனப் பெயர் சூட்டப்பட்டது. சக விஞ்ஞானிகளால் ‘கோகு’ என நேசத்தோடு அழைக்கப்பட்டார். 1989-90ல் அறிவியல் தொழில்நுட்ப மற்றும் கல்வித் துறையின் மத்திய இணை அமைச்சராகவும் இருந்தார். 1990-96ல் தில்லி மாநிலங்களவை உறுப்பினராகவும் இருந்தார். இந்தியாவின் நவீன அறிவியல் வளர்ச்சிக்கு வித்திட்ட எம்.ஜி.கே. மேனன் நவம்பர் 22, 2016ல் தனது 88வது அகவையில் இவ்வுலகை விட்டு பிரிந்தார். 2008ம் ஆண்டில் எம்.ஜி.கே.மேனனை கௌரவிக்கும் வகையில் நூண்கோள் ஒன்றுக்கு 7564கோகுமேனன் எனப் பெயர் சூட்டப்பட்டது.

Related Post

“சதி”ஒழிப்பு தினம் தான் இன்று!
SK23 படக்குழுவினருடன் பிறந்த நாள் கொண்டாடிய நடிகர் சிவகார்த்திகேயன்
delhi india அரசியல் அரியலூர் அழகு குறிப்பு ஆன்மீகம் இந்த நாள் இராணிப்பேட்டை இராமநாதபுரம் இலக்கியம் இன்றைய ராசி பலன்கள் ஈரோடு உடனடி நியூஸ் அப்டேட் உலகம் கடலூர் கரூர் கல்வி கவிதைகள் கள்ளக்குறிச்சி கன்னியாகுமரி காஞ்சிபுரம் கிருஷ்ணகிரி கோயம்புத்தூர் சமையல் குறிப்பு சிவகங்கை சினிமா சினிமா கேலரி செங்கல்பட்டு சென்னை சேலம் தஞ்சாவூர் தமிழகம் தருமபுரி திண்டுக்கல் திருச்சிராப்பள்ளி திருநெல்வேலி திருப்பத்தூர் திருப்பூர் திருவண்ணாமலை திருவள்ளூர் திருவாரூர் தினம் ஒரு திருக்குறள் தினம் ஒரு விவசாயம் தூத்துக்குடி தெரிந்து கொள்வோம் தென்காசி தொழில்நுட்பம் தேசிய செய்திகள் தேனி நாகப்பட்டினம் நாமக்கல் நீலகிரி படித்ததில் பிடித்தது புகைப்படங்கள் புதுக்கோட்டை பெரம்பலூர் பொது அறிவு – வினாவிடை மக்கள் கருத்து மதுரை மயிலாடுதுறை மருத்துவம் மாவட்டம் லைப்ஸ்டைல் வணிகம் வார இதழ் வானிலை விருதுநகர் விழுப்புரம் விளையாட்டு வீடியோ வேலூர் வேலைவாய்ப்பு செய்திகள் ஜோதிடம் - ராசிபலன்
நீங்க ரெடின்னா நாங்க ரெடி?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *