• Mon. Dec 2nd, 2024

4 நாட்களுக்குப் பிறகு மேட்டுப்பாளையம், உதகைமலை ரயில் சேவை இயக்கம்

Byவிஷா

May 22, 2024

கனமழை காரணமாக ஏற்பட்ட மண் சரிவால், 4 நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மேட்டுப்பாளையம் – உதகை மலை ரயில் சேவை இன்று மீண்டும் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் இருந்து நீலகிரி மாவட்டம் உதகைக்கு தினமும் காலை 7.10 மணிக்கு நீலகிரி மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது.
நூற்றாண்டு பழமை வாய்ந்த இம்மலை ரயிலில் பயணித்தபடி நீலகிரி மலையின் இயற்கை அழகை கண்டு ரசிக்க உள்நாடு மட்டுமின்றி பல்வேறு வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். இந்நிலையில், கனமழை காரணமாக இதன் தண்டவாள பாதையில் ஏற்பட்ட மண் சரிவால் கடந்த 18-ம் தேதி முதல் நேற்று (21 -ம் தேதி) வரை நான்கு நாட்கள் மலை ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது.
தொடர் மழை காரணமாக ஆடர்லி – ஹில்குரோவ் ஆகிய ரயில் நிலையங்கள் இடையே மண், பாறைகள் சரிந்து விழுந்து தண்டவாளங்கள் புதைந்து போய் சேதமடைந்த நிலையில், இதனை சீரமைக்கும் பணியில் ரயில்வே பணியாளர்கள் ஈடுபட்டு வந்தனர். நேற்று (மே 21) மாலை சீரமைப்பு பணிகள் முழுமையாக முடிவடைந்தது.
இதைத் தொடர்ந்து இன்று (மே 22) காலை வழக்கம் போல் காலை 7.10 மணிக்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகைக்கு மலை ரயில் போக்குவரத்து தொடங்கியது. இதனால் ஏற்கனவே முன்பதிவு செய்து காத்திருந்த சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியுடன் மலை ரயிலில் பயணித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *