பிரத்யேகமாக பெண்களுக்கென ஒதுக்கப்பட்டஇளஞ்சிவப்பு ஆட்டோக்களை ஆண்கள் ஓட்டக்கூடாது. மீறி ஓட்டினால் ஆர்.டி.ஓ மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என சமூகநலத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
சென்னையில் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்புடன் பயணம் செய்யும் வகையில், பெண்களுக்கான உதவி எண் மற்றும் ஜி.பி.எஸ். கருவி பொருத்தப்பட்ட ‘இளஞ்சிவப்பு’ ஆட்டோ சேவை நடைமுறைப்படுத்தப்படும் என சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது. அந்த வகையில், இந்த திட்டம் மார்ச் 8ஆம் தேதி மகளிர் தினத்தை முன்னிட்டு முதலமைச்சர் முக.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
அப்போது, முதற்கட்டமாக 165 பெண்களுக்கு இளஞ்சிவப்பு ஆட்டோக்களை வழங்கினார். இரண்டாம் கட்ட பயனாளிகள் தேர்வுக்கு இதுவரை 141 பேர் விண்ணப்பித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த சூழலில் தான், இளஞ்சிவப்பு ஆட்டோக்களை, ஆண்கள் சிலர் ஓட்டிச் செல்வதாக புகார் எழுந்தது.
இதுதொடர்பாக, சமூகநலத்துறை கள ஆய்வு குழு கடந்த சில தினங்களாக ஆய்வு மேற்கொண்டது. அப்போது, இளஞ்சிவப்பு ஆட்டோக்களை சில ஆண்கள் வணிக ரீதியிலான போக்குவரத்து சேவைக்கு பயன்படுத்தி வந்தது கண்டறியப்பட்டது. அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், சில உடல்நலப் பிரச்சனைகளால் பெண் பயனாளிகளால் ஆட்டோக்களை ஓட்ட முடியவில்லை.
இதனால், அந்த பெண்களின் கணவர்கள் இளஞ்சிவப்பு ஆட்டோக்களை ஓட்டி வந்தது சமூக நலத்துறையின் கள ஆய்வில் கண்டறியப்பட்டது. இருப்பினும், பெண்களுக்காக பிரத்யேகமாக ஒதுக்கப்பட்ட ஆட்டோக்களை பெண்களே ஓட்ட வேண்டும் என்றும், விதிகளை மீறினால் ஆர்.டி.ஓ. மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் சமூக நலத்துறை எச்சரித்துள்ளது.
இளஞ்சிவப்பு ஆட்டோக்களை ஆண்கள் ஓட்டக்கூடாது : சமூகநலத்துறை எச்சரிக்கை
