தேனி மாவட்டம், உத்தமபாளையம் தாலுகா, நாராயணத்தேவன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த அருந்ததியர் சமூக மக்கள் மற்றும் தமிழ்ப்புலிகள் கட்சியினர் சார்பில், தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது.

நாராயணத்தேவன்பட்டி கிராமத்தில் உள்ள ஸ்ரீ பட்டாளம்மன் கோயில் முன்பு உள்ள அரசுக்கு சொந்தமான காலியிடத்தில் ஒரு சமுதாய மக்கள் மட்டும் பாதை மற்றும் குடிநீர்த் தொட்டிக்கான அணுகுலத்தைத் தடுக்கும் வகையில் வேலி அமைத்து ஆக்கிரமிப்பு செய்வதை தடுத்து, உரிய நில அளவீடு செய்து தனித்தனனி சர்வே எண்கள் வழங்கக் கோரி இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இக்கோரிக்கையை வலியுறுத்தி திரு. ராஜங்கம் என்பவர் மாவட்ட ஆட்சியரிடம் மனுவும் அளித்துள்ளார்.
அதிகாரிகள் அலுவலகத்தை முற்றுகையிடுவதைத் தவிர்க்கும் பொருட்டு, தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் நுழைவாயில் முன்பு காவல்துறை சார்பில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. நுழைவாயில் முழுவதும் இரும்புத் தடுப்புப் பேரிகார்டுகள் கொண்டு முழுமையாக அடைக்கப்பட்டன.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகப் போராட்டக்காரர்கள் அலுவலகத்திற்குள் நுழைய அனுமதிக்கப்படாமல், ஆட்சியர் அலுவலகத்திற்கு வெளியே சாலையிலேயே தடுத்து நிறுத்தப்பட்டனர். இதனால், போராட்டக்காரர்கள் தங்களது கோரிக்கை பதாகைகள் மற்றும் கட்சி கொடிகளுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் நுழைவாயிலுக்கு வெளியே நின்று முழக்கங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.



