


சிவகாசி நகராட்சி மாநகராட்சியாக கடந்த 2021 ல் தரம் உயர்த்தப்பட்டது. அதில் திருத்தங்கல் நகராட்சி இணைக்கப்பட்டன. மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் சொத்துக்கள், காலி மனைகள், குடிநீர் கட்டணம் ,குப்பை வரி, தொழில் வரி, உட்பட வரிகள் மூலம் கடந்த நிதி ஆண்டில் 21 கோடி ரூபாய் வருவாயாக கிடைத்தது. இந்த ஆண்டு சொத்து வரி உட்பட அனைத்து வரிகளையும் அரசு உயர்த்தியுள்ளது.

இதனால் மாநகராட்சிக்கு வரவேண்டிய வரித்தொகையும் உயர்ந்தது. மாநகராட்சிக்குட்பட்ட 55 ஆயிரம் சொத்துக்கள் உள்ளன. இவற்றின் மீது விதிக்கப்பட்ட வரிகள் மூலம் இந்த ஆண்டுக்கு ரூபாய் 18 கோடியே 50 லட்சம் நிதி கிடைத்துள்ளது. மேலும் காலி மனைகள் மூலம் 52 லட்சமும் ,தொழில் வரிகள் மூலம் 70 லட்சமும், குடிநீர் இணைப்புகள் மூலமாக ஒரு கோடியே 60 லட்சமும், குப்பை வரிகள் மூலம் ஒரு கோடியே ஐம்பது லட்சமும் ,மாநகராட்சி சொந்தமான கடையில் இருந்து வாடகை மூலமாக ஒரு கோடியை 25 லட்சம் உள்பட 25 கோடி கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

சிவகாசி மாநகராட்சி வரி வசூலில் அதிகாரிகள் காட்டிய தீவிரம் காரணமாக மாநகராட்சிக்கு இந்த நிதி ஆண்டில் ரூபாய் 25 கோடி வருவாயாக கிடைத்துள்ளது. மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரிகளை செலுத்திய பொது மக்கள், தொழிலதிபர்கள் ,வியாபார பெருமக்கள், உள்ளிட்ட அனைவருக்கும் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்வதாக சிவகாசி மாநகராட்சி மேயர் சங்கீதா இன்பம் தெரிவித்தார்.
மேலும் 100% வரி வசூல் செய்ததன் காரணமாக மத்திய அரசின் சிறப்பு மானிய தொகை கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் கூறினார். அந்த சிறப்பு நிதியை கொண்டு மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வளர்ச்சி பணிகளுக்கு பயன்படுத்தப்படும் எனவும் கூறினார்.

