அதிமுகவுக்கு முதன்முதலில் தேர்தல் வெற்றியைத் தேடித்தந்த மாயத்தேவர் காலமானார். அவருக்கு வயது 88.
1972ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் திமுகவிலிருந்து நீக்கப்பட்ட எம்ஜிஆர் அதிமுகவை தொடங்கிய பிறகு முதன்முறையாக திண்டுக்கல் மக்களவைத் தொகுதி இடைத் தேர்தலை சந்திக்க நேர்ந்தது. அப்போது கலைஞர் தலைமையில் திமுக ஆட்சி நடைபெற்றது. 1973-ஆம் ஆண்டு மே மாதம் 20ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. ஆளுங்கட்சியான திமுக சார்பில் பொன் முத்துராமலிங்கம் வேட்பாளர். அவரை எதிர்த்து அதிமுக சார்பில் மாயத்தேவர். ஆளுங்கட்சியான திமுக, சுலபமாக வெற்றி பெற்றுவிடும் என்று பலரும் நினைத்தனர். மே 21ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்ட போது பயங்கரமான அரசியல் களமே ஒட்டுமொத்தமாக அதிர்ந்து போனது.

ஆளுங்கட்சியான திமுக வெற்றி பெறாததுடன் மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டது. இந்திரா காங்கிரஸ் வேட்பாளர் டெபாசிட்டே இழந்து போனார். காமராஜரின் பழைய காங்கிரஸ் சார்பில் நிறுத்தப்பட்ட என்எஸ்வி சித்தன் இரண்டாம் இடத்திற்கு வந்தார். 2,60,824 வாக்குகள் பெற்று அதிமுகவின் வேட்பாளர் மாயத்தேவர் சுமார் ஒரு லட்சத்து 40 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றார். ஆளும் கட்சியான திமுக 93 ஆயிரம் வாக்குகள் என்றால், எம்ஜிஆரின் அண்ணா திமுகவுக்கு கிடைத்தது 2 லட்சத்து 60 ஆயிரம் வாக்குகள். இத்தகைய மிகப்பெரிய சலசலப்பை ஏற்படுத்திய மாயத்தேவர் திண்டுக்கல்லை அடுத்துள்ள சின்னாளபட்டியில் உள்ள தனது வீட்டில் உடல்நிலை குறைவு காரணமாக காலமானார்.