மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே நக்கலப்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் இளநிலை எழுத்தராக பணியாற்றி வருபவர் பூச்சிபட்டியைச் சேர்ந்த செல்லாண்டி., இவர் பணியாற்றும் கூட்டுறவு சங்கத்தில் கடந்த மாதம் நடந்த வருடாந்திர தணிக்கையில் கடந்த 2022 முதல் போலி நகைகளை அடகு வைத்து நகை கடன் பெற்று தோராயமாக 35 லட்சத்திற்கும் அதிகமாக லட்சக்கணக்கான ரூபாய் மோசடியில் ஈடுபட்டது கண்டறியப்பட்டதாக கூறப்படுகிறது.,

இது குறித்து மதுரை மாவட்ட கூட்டுறவு சங்க அலுவலர்கள் சம்மந்தப்பட்ட கூட்டுறவு சங்கத்தினர் ஒன்றிணைந்து மோசடி செய்த தொகையை சங்கத்தில் கட்ட வேண்டும் எனவும், மேலும் துறை ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்ததாக கூறப்படுகிறது.,
இந்நிலையில் இந்த மோசடிக்கும் தனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை எனவும், தன்னை தொடர்புபடுத்தி நடவடிக்கை எடுப்பதால் மன உளைச்சலுக்கு ஆளானதாக குற்றம் சாட்டி எழுத்தர் செல்லாண்டி இன்று தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
மேலும் 2022 ஆம் காலகட்டத்தில் தற்காலிக நகை மதிப்பீட்டாளராக பணியாற்றிய பூச்சிபட்டியைச் சேர்ந்த செல்வராஜ் என்பவர் நல்லம்மாபட்டியைச் சேர்ந்த அன்புதமிழன் என்பவரது குடும்பத்தைச் சேர்ந்த 14 நபர்களின் பெயரில் போலியான நகை அடகு வைத்து ரூபாய் 35 லட்சம் வரை மோசடி செய்துள்ளதாக தெரியவந்துள்ளதாகவும், இதற்கும் தனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என மரண வாக்குமூலமாக கடிதம் எழுதி வைத்துள்ளார்.
தகவலறிந்து விரைந்து வந்த உசிலம்பட்டி தாலுகா காவல் நிலைய போலீசார் உடலை கைப்பற்றி உடற்கூறாய்விற்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு இந்த தற்கொலை தொடர்பாக தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.