கோவை மாவட்டம், அன்னூர் அருகே உள்ள பிள்ளையப்பம் பாளையத்தை சேர்ந்தவர் சக்திவேல். இவர் அந்தப் பகுதியில் தனியார் மில் நடத்தி வருகிறார். இந்த மில்லில் தயாரிக்கப்படும் துணிகளை மும்பையை சேர்ந்த பரத்குமார் மாண்டிட் (வயது 42) என்பவர் கொள்முதல் செய்வது வழக்கம்.
அதன்படி அவர் இந்த மில்லில் இருந்து கடந்த 2022 – ம் ஆண்டு ரூ.6 கோடி துணிகளை கொள்முதல் செய்தார். அந்த துணிகள் கண்டெய்னர் மூலம் லாரியில் அனுப்பி வைக்கப்பட்டது. அந்த துணிகளை பெற்றுக் கொண்ட பரத்குமார் மாண்டிட் அதற்கான பணத்தை அனுப்பி வைப்பதாக கூறினார்.

ஆனால் அதில் அவர் ரூ.1.5 கோடியை மட்டும் கொடுத்து உள்ளார். மீதமுள்ள ரூ.4.5 கோடியை கொடுக்கவில்லை. இது தொடர்பாக சக்திவேல் மற்றும் அந்த மில் நிர்வாகிகள் கேட்டதற்கு அவர் சரியான பதிலை தெரிவிக்கவில்லை. இது குறித்து சக்திவேல் கோவை மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார்.
அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டதை அறிந்த பரத்குமார் மாண்டிட் தலைமறைவானார். எனவே அவரை பிடிக்க குற்றப் பிரிவு ஆய்வாளர் செல்வம், உதவி ஆய்வாளர் நாகராஜ், காவலர்கள் ரமேஷ் ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.
அத்துடன் அவர் வெளிநாடுகளுக்கு தப்பி ஓடுவதை தடுக்க நாட்டில் உள்ள அனைத்து விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களுக்கு லுக்-அவுட் நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டது. அத்துடன் தலைமறைவான பரத்குமார் மாண்டிட் தொடர்பாக போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில், வெளிநாடு தப்பிச் செல்ல அவர் மும்பை விமான நிலையத்துக்கு சென்று உள்ளார். அப்போது அவரை கண்காணித்த விமான நிலைய போலீசார் பரத்குமார் மாண்டிட்டை பிடித்து வைத்து, கோவை மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதை அடுத்து, தனிப்படையினர் மும்பை விமான நிலையம் விரைந்தனர். பின்னர் அவர்கள் பரத்குமார் மாண்டிட்டை கைது செய்து கோவை அழைத்து வந்தனர். பின்னர் அவரை கோவை 6 – வது மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
ரூ.4.5 கோடி மோசடி வழக்கில் தலைமறைவாக இருந்த நபரை கைது செய்ய தனிப்படையினரை கோவை மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் கார்த்திகேயன் மற்றும் உயர் அதிகாரிகள் பாராட்டினர்.