புயலின் முகங்களே பூகம்பத்தின் விதைகளே வணக்கம்! நலம் வாழிய நலனே!!
மெளனம் கலைகின்றேன்:
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தில் தொடர்ந்து இயங்க வேண்டும் என்ற உணர்வுடனே இதுநாள் வரை இருந்து வந்துள்ளேன். ஆனால் கழகத்தில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை அதற்கு நிச்சயமாக நான் காரணம் இல்லை
துரோகம்:
கடந்த 09 06 25 புதன்கிழமை அன்று திராவிட ரத்னா தமிழினக் காவலர் நான் உயிராக நேசித்த என் அன்புத் தலைவர் திரு.வைகோ எம்பி அவர்கள் ஒரு தொலைக்காட்சி பேட்டியில் தமிழிழத் தாயகத்தின் ஒப்பற்ற தலைவர் திரு. வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களுக்கு புலிப்படை வீரன் மாத்தையா துரோகம் செய்ததைப் போன்று எனக்கு (வைகோ) மல்லை சத்யா துரோகம் செய்து விட்டார் என்று ஒப்பிட்டு பேசினார்.
சான்றோர் பெருமக்களே! நான் மாத்தையா போன்று துரோகியா நீதி சொல்லுங்கள்.
என் அரசியல் பொதுவாழ்க்கையில் என் அன்புத் தலைவர் திரு. வைகோ எம்பி அவர்களுக்கு எதிராக நான் சிந்தித்தேன், செயல்பட்டேன் என்பது உண்மையானால் பெரும்புலவர் இளங்கோ அடிகளின் தமிழர்களின் பெருங்காப்பியம் சிலப்பதிகாரத்தின் மூதுரை. அரசியல் பிழைத்தோற்க்கு அறமே கூற்றுவனாகட்டும் என்ற நீதி நின்று நிலைத்து என்னை இப்போதே சுட்டெரிக்கட்டும்.
இறந்து போயிருப்பேன்:
அன்பின் தோழமைகளே அன்புத் தலைவர் திரு. வைகோ எம்பி அவர்கள் தன் மகன் துரை எம்.பி அவர்களின் அரசியலுக்காக 32 ஆண்டுகள் வெளிப்படைத் தன்மையோடு உண்மையாகவும், விசுவாசமாகவும் குடும்பத்தை மறந்து என் வாழ்க்கையின் 32 ஆண்டுகளா வசந்தத்தை தொலைத்து, இரவு, பகல் பாராமல் கட்சி கட்சி தலைவர் திரு வைகோ என்று பணியாற்றி வந்த என் மீது அபாண்டமாக துரோகப் பழி சுமத்தப்பட்ட கடந்த 09. 07. 25 தொடங்கி 13. 07. 25 ஞாயிற்றுக்கிழமை இரவு வரை ஐந்து இரவுகளும் என்னால் தூங்க முடியவில்லை என் தூக்கத்தை தொலைத்து விட்டேன். என் அரசியல் பொது வாழ்க்கையை வீழ்த்துவதற்கு உயர்ந்த உலகம் போற்றும் மாமனிதர் தலைவர் திரு வைகோ எம்பி அவர்கள் வேறு ஏதாவது ஒரு குற்றச்சாட்டை சொல்லி இருக்கலேமே அல்லது ஒரு பாட்டில் விசம் வாங்கி கொடுத்து குடிக்க சொல்லி இருந்தால் குடித்து செத்து போய் இருப்பேனே, அன்புத் தலைவர் திரு வைகோ அவர்களே, அறம் சார்ந்த என் அரசியல் பொதுவாழ்வை உங்கள் மகனுக்காக வீழ்த்துவதற்கு துரோகம் என்ற சொல்லா தங்களுக்கு கிடைத்தது வேதனையில் துடிக்கின்றேன் நான்.
என் அன்புத் தலைவர் திரு வைகோ எம்பி அவர்களே உங்கள் தாள் பணிந்து மன்றாடி கேட்டுக் கொள்கின்றேன் இனி எக்காலத்திலும் யார் மீதும் எந்த தொண்டன் மீதும் இதைப் போன்ற அபாண்டமான பழியை சுமத்தி பழிக்கு ஆளாக வேண்டாம் அரசியலில் நீங்கள் அடைந்து இருக்கும் உங்கள் உயரத்திற்கு அது அழகல்ல
போராட்டக்காரன்:
இடர் மிகுந்த மறுமலர்ச்சி திமுகவின் 32 ஆண்டுகளா லட்சியப் பயணத்தில் தலைவர் திரு வைகோ எம்பி அவர்கள் என்னை ஒரு போராட்டக் காரணாகவே வார்பித்து உள்ளார் இந்த நெருப்பு வளையத்தில் இருந்து மீண்டு வந்து திராவிட இயக்கத் கருத்தியலின் தந்தை அயோத்தி தாசர் பண்டிதர்
டாக்டர் நடேசனார்
பிட்டி தியாகராயர்
டாக்டர் டி எம் நாயர்
பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் பேரறிஞர் அண்ணா ஆகியோர் வகுத்துத் தந்த பாதையில் திராவிட இயக்கச் சுடரை உயர்த்திப் பிடித்து, தமிழ் நாட்டின் ஜீவாதார உரிமைகளை பாதுகாக்கும் களத்தில் ஒரு படை வீரனாக நின்று தமிழ்ச் சங்கப் பணிகள் உலகத் தமிழர்களின் உரிமைகள் இளைஞர்களை வார்பிக்கும் தற்காப்புக் கலை போன்ற பணிகளில் வழக்கம் போல் இயங்கிடுவேன்.
அப்போதே சொன்னேன்
அன்புத் தலைவர் திரு. வைகோ எம்பி அவர்களே தற்போது உள்ள தலைமைக் கழக நிர்வாகிகள் தேர்வின் போது நான் துணை பொதுச் செயலாளர் பொறுப்பை ஏற்க மறுத்து அதற்கான காரணத்தை 2023 மே மாதம் 22 தேதி தங்களை தாயகத்தில் சந்தித்து தற்போது நிலவும் சூழ்நிலையை அப்போதே தெரிவித்தேன் தங்களின் வற்புருத்தலின் காரணமாகவே நான் அப்போது ஒத்துக் கொண்டேன். தங்களிடம் நான் எதையெல்லாம் கூறினேனோ அது தற்போது நடந்து கொண்டு வருகிறது கடந்த மூன்று ஆண்டுகளாக சுயமரியாதை இழந்து ஒரு சிலரால் கடும் நிந்தனைக்கும் அவதூறுக்கும் ஆளாகி வந்திருக்கின்றேன்.
நன்றி
மதிமுகவில் 31 ஆண்டுகால என்னுடைய பயணத்தில் பல்வேறு நிலையில் பொறுப்புகள் வழங்கி அழகு பார்த்த தங்களுக்கு உண்மையாகவும் விசுவாசமாகவும் பணியாற்றி வந்துள்ளேன் யாருக்காகவும் எதற்காகவும் உங்களை நான் விட்டுக் கொடுத்தவன் அல்ல என்பதை தாங்கள் நன்கு அறிவீர்கள்
லண்டன்:
கடந்த 15 06 25 ஜூன் மாதம் ஞாயிற்றுக்கிழமை அன்று இங்கிலாந்து நாட்டின் ஆக்ஸ்போர்டு நகரத்தில் ஈழத் தமிழர்களுக்கு சொந்தமான 108 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள உலகத் தமிழர் வரலாற்று வளாகத்தில் நடைபெற்ற அய்யன் திருவள்ளுவர் சிலை திறப்பு விழாவிலும் 18. 06. 25 புதன்கிழமை அன்று இங்கிலாந்து தலைநகர் லண்டன் பாராளுமன்றத்திலும் கட்சி வேட்டி கட்டி கருப்புத் துண்டுடன் நான் பேசும் போதும் உங்களைப் பற்றித் தான் பேசினேன்
அன்புத் தலைவர் திரு. வைகோ அவர்களே காலம் முழுவதும் தங்களுக்கும் மதிமுக விற்கும் நன்றி கடன் பட்டவனாக இருப்பேன் என்னுடைய அரசியல் முகவரி நீங்கள்தான் தங்களைப் போன்றவரை தலைவராக பெற்றது நான் பெற்ற பேறு உங்களை எப்போதும் என் இதயத்தில் வைத்து பூஜித்து வருவேன்.
உங்களின் உயர்ந்த அரசியல் நோக்கம் வெற்றிபெற என் மனப்பூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
என்னுடைய இந்த நிலை கழகத்தில் இருக்கும் சிலருக்கு மகிழ்ச்சியாகவும் என்னை நிபந்தனையற்று நேசித்த என் அன்புத் தலைவர் திரு வைகோ எம்பி அவர்களின் கண்மணிகள் பலருக்கு வருத்தமாகவும் இருக்கும். உங்கள் இன்பத்திலும் துன்பத்திலும் பங்கேற்றவன் என்ற முறையில் நீங்கள் காட்டிய தூய அன்பிற்கு நான் என்றும் அடிமைப்பட்டவன் உங்கள் ஒவ்வொருவரையும் என் இதயத்தில் ஏந்தியிருப்பேன். கவலைப் பட வேண்டாம். இந்த சோதனையான காலகட்டத்தை கடந்து வருவேன்.
மூன்று நாட்கள்:
இன்பமோ துன்பமோ விருந்தும் மருந்தும் மூன்று நாட்களுக்கு மேல் இருக்கக்கூடாது.
மரம் ஒய்வு எடுக்க விரும்பினாலும் காற்று விடுவதாக இல்லை என்ற சீனத்தின் தலைவர் மாவோ அவர்களின் பொன்மொழிக்கு இலக்கணமாக கடந்த நான்கு நாட்களாக நான் எதுவும் பேசாமல் மெளனம் காத்து வந்தேன் காரணம் நான் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் துணை பொதுச் செயலாளராக இப்போது வரையில் கடமை கண்ணியம் கட்டுப்பாடு காத்து வந்த நிலையில் என்மீது மதிமுக முதன்மைச் செயலாளர் சகோதரர் திரு துரை எம்பி அவர்கள் பொதுவெளியில் விமர்சித்து பேசியுள்ளார் பதில் சொல்ல வேண்டிய ஜனநாயக கடமை எனக்கு உண்டு
நீ பேசாத வார்த்தைக்கு
நீ எஜமான்
நீ பேசிய வார்த்தைக்கு
நீ அடிமை
என் மெளனத்தைக் கலைக்கின்றேன்
இந்த இக்கட்டான காலகட்டத்தில் நேரிலும் தொலைபேசி வாயிலாகவும் ஆறுதல் கூறிய சான்றோர் பெருமக்களுக்கும் என் தரப்பு நியாயத்தை கற்றறிந்த வழக்கறிஞரைப் போன்று அழுத்தமான வாதங்களை ஊடகங்கள் மூலம் நாட்டு மக்களுக்கு புரியவைத்த தமிழகத்தின் தலை சிறந்த அரசியல் விமர்சகர்கள் அரசியல் ஆளுமைகளுக்கும் அன்பு நண்பர்களுக்கும் தோழர்களுக்கும் என் நெஞ்சின் அடியாழத்தில் இருந்து நன்றி கூறுகின்றேன்.
என்றும் மறுமலர்ச்சிப் பாதையில், என்று மல்லை சி ஏ சத்யா அறிக்கையாக வெளியிட்டுள்ளார்.