• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

அமளி காரணமாக மக்களவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

Byவிஷா

Dec 20, 2024

இந்தியா கூட்டணி எம்.பி.க்களின் தொடர் முழக்கங்களுக்கு இடையே மக்களவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அம்பேத்கர் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கடந்த 17-ம் தேதி பேசிய பேச்சுக்கு அவர் மன்னிப்பு கேட்க வேண்டும், அவர் பதவி விலக வேண்டும் இல்லாவிட்டால் அவரை பிரதமர் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் இன்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாடாளுமன்றம் கூடுவதற்கு முன்பாக நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், அம்பேத்கரின் புகைப்படத்தை கைகளில் ஏந்தியவாறு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் எம்பி பிரியங்கா காந்தி வத்ரா உள்ளிட்ட இண்டியா கூட்டணி எம்.பி.க்கள் கலந்து கொண்டனர். இதேபோல், பாஜக எம்பிக்களும் வேறு ஒரு இடத்தில் காங்கிரஸ் கட்சிக்கு எதிரான பதாகைகளை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பியவாறு போராடினர்.
இந்த போராட்டங்களைத் தொடர்ந்து காலை 11 மணிக்கு மக்களவை கூடியது. பிரதமர் நரேந்திர மோடி, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர். தேசிய கீதம் இசைக்கப்பட்டு அவை நடவடிக்கை தொடங்க இருந்த நிலையில் எதிர்க்கட்சி எம்பிக்கள் அமித் ஷாவுக்கு எதிராக கோஷங்களை எழுப்பத் தொடங்கினர். உடனடியாக, அவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாகக் கூறி சபாநாயகர் ஓம் பிர்லா அவையை ஒத்திவைத்தார்.
இதேபோல், மாநிலங்களவை கூடியதும் அங்கும் எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் அமளியில் ஈடுபட்டதால் அவையை நண்பகல் 12 மணி வரை ஒத்திவைப்பதாக அவைத் தலைவர் ஜக்தீப் தன்கர் அறிவித்தார்.