மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள கரட்டுப்பட்டி கிராமத்தில் ஸ்ரீ காளியம்மன் திருக்கோவிலில், 40 ஆண்டுகளுக்குப் பிறகு பாரம்பரிய முறைப்படி அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு அதிகாலையில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க யாகசாலை பூஜைகளை தொடங்கினர். தொடர்ந்து, பாரம்பரிய வழக்கப்படி கிராமத்தின் கோவில் காளையை இளைஞர்கள் மேளதாளத்துடன் ஊர்வலமாக அழைத்து வந்தனர். அம்மனுக்குச் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டதை தொடர்ந்து, கோவில் காளை முதன்முறையாகக் கோவிலுக்குள் அழைத்துச் செல்லப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து, சிவாச்சாரியார்கள் தலைமையில் பூர்ணாஹுதி யாகம் நடைபெற்றது. பின்னர், யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீர் அடங்கிய கலசங்களை சிவாச்சாரியார்கள் மற்றும் கோவில் பூசாரிகள் தலையில் சுமந்து, மேளதாளங்கள் முழங்கக் கோவிலை சுற்றிப் புனித நீர் கலசங்களை எடுத்து வந்தனர்.
இதையடுத்து, வேத மந்திரங்கள் முழங்க கோவில் விமான கலசங்களில் சிவாச்சாரியார்கள் புனித நீரை ஊற்றி மகா கும்பாபிஷேகத்தை நடத்தினர்.
கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்ட அதே நேரத்தில், கோவில் கோபுரத்தைச் சுற்றி நான்கு திசைகளிலும் கருட பகவான் வட்டமிட்டது.

இதைக் கண்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் “ஓம் சக்தி, பராசக்தி” என பக்திப் பரவசத்துடன் கோஷமிட்டு அம்மனை வழிபட்டனர். கோபுர கலச அபிஷேகத்தைத் தொடர்ந்து, மூலவர் காளியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்குப் புனித நீரால் சிறப்பு அபிஷேகமும், மகா தீபாராதனையும் நடைபெற்றது.
40 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற இந்த கும்பாபிஷேக விழாவில், கரட்டுப்பட்டி மற்றும் சுற்றுவட்டாரக் கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது சோழவந்தான் காவல்துறையினர் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.



