தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருள்மிகு ஸ்ரீ உஜ்ஜைனி மகாகாளியம்மன் திருக்கோவில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா இன்று மிக விமர்சையாக நடைபெற்றது.

கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு கடந்த இரண்டு நாட்களாக விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம் மற்றும் மூன்று கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. இன்று காலை நான்காம் கால யாகசாலை பூஜைகள் நிறைவடைந்து, மகா பூர்ணாஹூதி மற்றும் கடம் புறப்பாடு நடைபெற்றது.
வேத மந்திரங்கள் மற்றும் “ஓம் சக்தி பராசக்தி” கோஷங்கள் முழங்க, மூலஸ்தானமான ஸ்ரீ உஜ்ஜைனி மகா காளியம்மன், விநாயகர் ஆகிய தெய்வங்களின் கோபுர கலசங்களுக்குப் புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து கலசங்களுக்கு மலர் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீப ஆராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர், புனித நீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டு தீர்த்தவாரி நடைபெற்றது.

இந்த விழாவில் உத்தமபாளையம், கம்பம், கூடலூர், சுருளிப்பட்டி மற்றும் புதுப்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.




