• Thu. May 2nd, 2024

மதுரையில் அதிரடி காட்டிய மாவட்ட ஆட்சியரால் பரபரப்பு..!

Byவிஷா

Oct 16, 2023

மதுரையில் நடைபெற்ற குறைதீர் கூட்டத்திற்கு தாமதமாக வந்த அதிகாரிகளை, அவர்களை மாவட்ட ஆட்சியர் உள்ளே அனுமதிக்க மறுத்து 2 மணி நேரம் காக்க வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.


மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரம்தோறும் திங்கள்கிழமை அன்று குறைதீர் கூட்ட முகாம் நடைபெறும். இந்தக் கூட்டம் நடைபெறுவதற்கு முன்பாக கடந்த வாரத்தில் பெறப்பட்ட மனுக்கள் மீதான நடவடிக்கை தொடர்பாக அதிகாரிகளுடன் மாவட்ட ஆட்சியர் ஆய்வு கூட்டம் நடத்துவார். இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக ஆய்வு கூட்டம் தொடங்குவதில் தாமதமாவதால் பொதுமக்கள் நீண்ட நேரமாக காத்திருப்பதோடு மக்களிடம் இருந்து மனுக்கள் பெறும்போது கடும் தள்ளுமுள்ளு ஏற்படுவதாக தொடர்ந்து புகார் வந்தது.
இந்நிலையில் வரும் நாட்களில் குறைதீர் மனுக்களை பெறுவதற்கு முன்பாக நடைபெறும் ஆய்வு கூட்டத்திற்கு காலை 9.30 மணிக்கு வருகை தர வேண்டுமென மாவட்ட ஆட்சியர் சங்கீதா வாய்மொழி உத்தரவு பிறப்பித்திருந்தார். இந்த நிலையில் இன்று குறைதீர் கூட்டத்திற்கு காலை 9.30 மணிக்கு மேலாக வந்த அதிகாரிகளை ஆய்வு கூட்டத்திற்கு கலந்துகொள்வதற்கு மாவட்ட ஆட்சியர் சங்கீதா அனுமதி மறுத்தார்.
இதனையடுத்து ஆய்வுக் கூட்டத்திற்காக வந்த காவல்துறை, வனத்துறை, வருவாய்த்துறை உள்ளிட்ட அனைத்துத்துறை அரசு அதிகாரிகள் காலை 9:30 மணி முதல் மூன்று மணி நேரத்திற்கு மேலாக வெளியிலேயே காத்திருந்தனர். சில அதிகாரிகள் 2 நிமிடங்கள் தாமதமாக வந்த நிலையிலும் மாவட்ட ஆட்சியரின் இந்த நடவடிக்கை அதிகாரிகள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
இதன் காரணமாக மாவட்ட சங்கீதா தனியாக அமர்ந்தபடி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார். பல நேரங்களில் இரவு பகலாக ஆயிரம் ரூபாய் உதவித்தொகைக்காக காத்திருக்க வைத்து பணிச்சுமைகளை அளித்துவிட்டு இது போன்று 5 நிமிட தாமதத்திற்காக காத்திருக்க வைப்பதா என மனம் வெதும்பியபடி நீண்ட நேரமாக நின்றுகொண்டிருந்து கூட்டத்தில் கலந்துகொள்ளாமல் சிலர் சென்றனர்.

தாமதமாக வந்தால் உரிய விளக்கம் கேட்காமல் இதுபோன்று தண்டனை அளிப்பது போல எந்த தகவலும் அளிக்காமல் காத்திருக்க வைப்பது ஏன் என அதிகாரிகள் புலம்பினர்.





Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *