• Wed. Mar 18th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

மதுரை மேற்கு சட்டமன்றத் தொகுதிகள் – ஓர் அலசல்..,

ByKalamegam Viswanathan

Mar 18, 2026

மதுரை மாவட்டம் சோழவந்தான் சட்டமன்ற தொகுதியை பொருத்தவரை கடந்த 1962 ஆம் ஆண்டு முதல் நடைபெற்ற 14 பொதுத் தேர்தல்களில் காங்கிரஸ் 3, திமுக 6, அதிமுக 5 முறை இங்கே வெற்றி பெற்றுள்ளன. தற்போது திமுகவைச் சேர்ந்த வெங்கடேசன் சட்டமன்ற உறுப்பினராக பொறுப்பில் இருந்து வருகிறார். திமுக, அதிமுக என இரண்டு கட்சிகளுக்குமே இது சாதகமான நிலை உள்ளது.

கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் திமுகவின் ஆ வெங்கடேசன் 84,240 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவர் அடுத்தபடியாக அதிமுகவின் மாணிக்கம் 67,195 வாக்குகள் பெற்றார். அந்தத் தேர்தலின் போது இத்தொகுதியின் மொத்த வாக்காளர்கள் 2,16,106 பேர். பதிவான வாக்குகள் 1,75,361 ஆகும்.

இது முழுவதும் கிராமங்கள் சார்ந்த சட்டமன்ற தொகுதி ஆகும். வாடிப்பட்டி மற்றும் மதுரை வடக்கு வட்டங்களை கொண்டுள்ளது. பட்டியல் சமூக மக்கள் அதிக எண்ணிக்கையில் இங்கு உள்ளனர். அதன் காரணமாக இது தனி தொகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு அடுத்தபடியாக முக்குலத்தோர் சமூகம் அதிகமாக வாழ்கின்றனர். பிறகு இஸ்லாமியர்கள், நாடார் உள்ளிட்ட சாதியினர் இங்கு அதிகமாக உள்ளனர்.

சர்க்கரை ஆலைகள்

தற்போது வெளியிடப்பட்டுள்ள இறுதி வாக்காளர் பட்டியலின் அடிப்படையில் சோழவந்தான் (தனி 190) சட்டமன்றத் தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 1,04,246, பெண் வாக்காளர்கள் 1,08,243, மூன்றாம் பாலினத்தவர் 13 என மொத்தம் 2,12,502 வாக்காளர்கள் உள்ளனர். தேனூர் கிராமத்தைச் சேர்ந்த சுழியம் இளைஞர்கள் நற்பணி மன்ற ஒருங்கிணைப்பாளர் கார்த்திகை குமரன் கூறுகையில், சோழவந்தான் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் அரசு கலைக்கல்லூரி வேண்டும். தொகுதியில் உள்ள அரசு பள்ளி கட்டிடங்கள் மேம்பாடு, கிராமங்கள் தோறும் நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்பட வேண்டும். அலங்காநல்லூர் மற்றும் பாண்டியராஜபுரம் சர்க்கரை ஆலைகளை மீண்டும் துவக்கினால் இதனால் சுமார் 3,000-க்கு மேற்பட்டோர் பயனடைவர். சோழவந்தான் தென்கரை வரை புறநகர் வழிச்சாலை அமைக்க வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பு. மேலும் அனைத்து ரயில்களும் சோழவந்தான் ரயில் நிலையத்தில் நின்று செல்வதற்கு வழிவகை செய்ய வேண்டும். சோழவந்தான் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அனைத்து கிராமங்களுக்கும் பொது கழிப்பறை வேண்டும். தேனூர் முதல் கொடிமங்கலம் வரை புதிய பாலம் அமைக்க வேண்டும். இப்பகுதியில் தொழிற்சாலைகள் எதுவும் இல்லாததால் அதற்குரிய செயல்பாடுகள் மிகவும் முக்கியம்.

சட்டமன்ற அலுவலகம் மாற்றம்

சோழவந்தான் சட்டமன்ற தொகுதியினை மறு சீரமைப்பு செய்ய வேண்டும். காரணம் சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் சோழவந்தானில் இல்லாமல் வாடிப்பட்டியில் இருப்பதை தவிர்த்து சோழவந்தானிலேயே சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் செயல்பட வேண்டும். பொதுமக்கள் இலகுவாக கோரிக்கை வைப்பதற்கு சட்டமன்ற அலுவலகத்தில் எப்போதும் போல குறைதீர் மனுக்களை பெறுவதற்கு வழிவகை செய்ய வேண்டும்’ என்றார்.

சோழவந்தான் சட்டமன்ற தொகுதியை பொறுத்தவரை திமுக அதிமுக இரண்டும் சம பலத்தில் இருந்தாலும், கடந்த பல ஆண்டுகளாக நாம் தமிழர் கட்சி இப்பகுதியில் மேற்கொண்டு மிகத் தீவிரமான வரும் களப்பணிகள் அக்கட்சியின் வாக்கு விகிதத்தை அதிக அளவு உயர்த்த வாய்ப்பிருக்கிறது என்கின்றனர் இப்பகுதி மக்கள். தமிழக வெற்றி கழகத்தைப் பொறுத்தவரை, முதல் தலைமுறை வாக்காளர்களிடம் கணிசமான வாக்குகளை பெறுவதற்கு வாய்ப்பு உள்ளது எனவும் தெரிவிக்கின்றனர்.

திருப்பரங்குன்றம் தொகுதி

மதுரை திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதியை பொருத்தவரை கடந்த 1957 முதல் 15 பொதுத் தேர்தல்களோடு 2016, 2019ஆம் ஆண்டுகளில் இரண்டு முறை இடைத்தேர்தல் நடைபெற்ற தொகுதி ஆகும். காங்கிரஸ் இரண்டு முறை இத்தொகுதியில் வெற்றி பெற்றுள்ளது. ஐந்து முறை திமுகவும், 9 முறை அதிமுகவும், 1 முறை தேமுதிகவும் தொகுதியை கைப்பற்றியுள்ளன. தற்போது வி வி ராஜன் செல்லப்பா சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். அதிமுக, திமுக இரண்டுக்கும் கணிசமான வாக்காளர்கள் இத்தொகுதியில் உண்டு.

கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலின் போது, அதிமுக சார்பாக போட்டியிட்ட வி வி ராஜன் செல்லப்பா 1.03.683 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இதற்கு அடுத்தபடியாக திமுக கூட்டணியில் போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொன்னுத்தாய் 74,194 வாக்குகள் பெற்றார். 2021 தேர்தலில் தொகுதியின் மொத்த வாக்காளர்கள் 3,21,501 பேர். பதிவான வாக்குகள் 2.35,849 ஆகும்.

அவனியாபுரம், திருப்பரங்குன்றம், ஹார்விப்பட்டி, திருநகர் பேரூராட்சிகளை உள்ளடக்கிய இந்த தொகுதி மதுரை தெற்கு வட்டத்தில் நிறைய கிராமங்களை கொண்டுள்ளது. அது மட்டுமன்றி இந்த தொகுதி, விருதுநகர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்டதாகும். முக்குலத்தோர் அதிகமாக வாழும் சட்டமன்ற தொகுதிகளில் இதுவும் ஒன்று. அவர்களுக்கு அடுத்தபடியாக பிள்ளைமார், சௌராஷ்ட்ரா, பட்டியல் சமூக மக்கள் என வாழ்கின்றனர்.

தெரு நாய்கள் தொல்லை

தற்போது வெளியிடப்பட்டுள்ள இறுதி வாக்காளர் பட்டியலின் அடிப்படையில் திருப்பரங்குன்றம் (195) சட்டமன்ற தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 1,50,596, பெண் வாக்காளர்கள் 1,57,157, மூன்றாம் பாலினத்தவர் 30 என மொத்தம் 3,07,783 வாக்காளர்கள் உள்ளனர். திருநகரைச் சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் விஷ்வா கூறுகையில், மாநகராட்சி மற்றும் கிராமங்களின் குடியிருப்பு பகுதியில் இருந்து குப்பை சேகரிப்பு மற்றும் மறுசுழற்சி கூடங்கள் ஏற்படுத்த வேண்டும். பொது வெளியில் குப்பை கொட்டுவதை முற்றிலும் தடுத்து நிறுத்த வேண்டும். நிறுவனங்கள் மற்றும் உணவுக் கூடங்களின் கழிவுகளை ஒழுங்குபடுத்த வேண்டும். பாதாள சாக்கடைத் திட்டம், கழிவுநீர் மறுசுழற்சி கூடங்கள் ஏற்படுத்த வேண்டியது மிகவும் அவசியம். அதேபோன்று தெரு நாய்களின் பெருக்கம் அதிகரித்து வரும் சூழலில் நாய்கள் கருத்தடை மையங்கள் ஏற்படுத்துவது, அனைத்து நாய்களுக்கும் கருத்தடை உறுதி செய்தல், வெறிநோய் தடுப்பு மருந்து இடுதல் ஆகியவற்றை தீவிர படுத்த வேண்டும். திருப்பரங்குன்றம் ஒன்றியம் மற்றும் மாநகராட்சி பகுதிகளில் உள்ள கண்மாய் உள்ளிட்ட நீர்நிலைகளை பாதுகாக்க ஏற்பாடு செய்ய வேண்டும்’ என்றார். மேலும் இந்த தொகுதிக்கு உட்பட்ட தோப்பூர் பகுதியில் தான் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ளது. அதற்கான பணிகள் விரைந்து முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்பதும் இந்த பகுதி மக்களின் வேண்டுகோளாக உள்ளது.

மதுரை மேற்கு தொகுதி

மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதியை பொருத்தவரை, கடந்த 1967 முதல் 13 பொதுத் தேர்தல்கள் இங்கு நடைபெற்றுள்ளன. அதிமுக 7 முறையும், சிபிஎம் 2 முறையும், திமுக 3 முறையும், காங்கிரஸ் ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளன. கடந்த 2011 ஆம் ஆண்டில் இருந்து இத்தொகுதியில் அதிமுக சார்பாக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு வெற்றி பெற்று தற்போது வரை உறுப்பினராக தொடர்கிறார். திமுக அதிமுகவுக்கு கணிசமான வாக்குகள் இந்த தொகுதியில் உள்ளன.

கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட செல்லூர் ராஜு 83,333 வாக்குகளோடு வெற்றிபெற்றார். இதற்கு அடுத்தபடியாக திமுகவின் சின்னம்மாள் 74,762 வாக்குகள் பெற்றார். இந்த தொகுதியின் மொத்த வாக்காளர்கள் 3,07,141. பதிவான வாக்குகள் 1,99,920 ஆகும்.

மதுரை மேற்கு சட்டமன்றத் தொகுதி மதுரை வடக்கு வட்டத்திற்கு உட்பட்ட பரவை, விளாங்குடி பேரூராட்சிகள் மற்றும் பல கிராமங்கள் உள்ளன. மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 60 முதல் 72ஆவது வார்டுகள் வரை இந்த தொகுதிக்குள் வருகின்றன. கடந்த 1980 ஆம் ஆண்டு தமிழகத்தின் முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் போட்டியிட்டு வெற்றி பெற்ற தொகுதியாகும். இத்தொகுதியின் பெரும்பான்மை சமூகமாக முக்குலத்தோரே உள்ளனர். இவர்களுக்கு அடுத்த நிலையில் பிள்ளைமார், செட்டியார் யாதவர் ஆதிதிராவிடர் மற்றும் இஸ்லாமியர்கள் கிறிஸ்தவர்கள் கணிசமாக வாழ்ந்து வருகின்றனர். முக்குலத்தோரும் பிள்ளைமாரும்தான் வெற்றி வேட்பாளர்களை தீர்மானிக்கும் சக்திகளாக உள்ளனர்.

பாலங்கள் வேண்டும்

தற்போது வெளியாகி உள்ள இறுதி வாக்காளர் பட்டியலின் அடிப்படையில், மதுரை மேற்கு (194) சட்டமன்ற தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 1,33,116, பெண் வாக்காளர்கள் 1,38,214, மூன்றாம் பாலினத்தவர் 11 என மொத்தம் 2,71,341 வாக்காளர்கள் உள்ளனர். கணிசமாக அதிமுகவுக்கு அதிக வாக்கு பலம் கொண்ட தொகுதிகளில் இதுவும் ஒன்று. பரவை பகுதியைச் சேர்ந்த சமூக செயற்பாட்டாளரும் எழுத்தாளருமான கதிர்நிலவன் கூறுகையில், மதுரை மேற்கு தொகுதியில் பல்வேறு திட்டங்கள் கிடப்பில் தான் உள்ளன. குறிப்பாக பழங்காநத்தம் பகுதியில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக கட்டப்பட்ட மேம்பாலத்தின் பயன்பாடு இப்போதும் கேள்விக்குறியாகத்தான் உள்ளது. அதே போன்று காளவாசல் சந்திப்பில் கட்டப்பட்ட மேம்பாலம், திண்டுக்கல் சாலையை இணைக்கும் வகையில் அமைந்துள்ளது தவிர தேனி சாலையை இணைக்கும் வகையில் அப்பாலம் அமைக்கப்படாதது பெரும் குறை. பாலத்தின் கீழ் பகுதியில் அரசரடி வரை போக்குவரத்து நெருக்கடி இப்போதும் தொடர்கிறது. முல்லைப் பெரியாறு குடிநீர்த் திட்டத்திற்காக குழாய்கள் பதிக்க தோண்டப்பட்ட சாலைகள் கொண்டும் குழியுமாக உள்ளன. அவை சீரமைக்கப்படவில்லை. இந்த தண்ணீருக்கு பல வீடுகளில் மீட்டர் பொருத்தப்படவில்லை. அது மட்டுமன்றி தண்ணீர் உப்புநீராக வருகிறது என்ற குற்றச்சாட்டு உள்ளது. விளாங்குடி பரவை சமயநல்லூர் பகுதிகளில் உள்ள ரயில்வே லெவல் கிராசிங் போக்குவரத்து நெருக்கடியோடு காணப்படுகிறது. இப்பகுதிகளில் ரயில்வே மேம்பாலம் அமைக்கப்பட வேண்டும்’ என்றார்.

மேற்கண்ட இரண்டு தொகுதிகளிலும் நாம் தமிழர் கட்சி கடந்த தேர்தல்களில் கணிசமான வாக்குகளை பெற்றுள்ளது. தொடர்ந்து இந்த முறையும் அதன் வாக்கு சதவீதம் அதிகரிப்பதற்கு வாய்ப்புகள் உள்ளன. அதேபோன்று தற்போது புதிதாக களத்தில் இறங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகமும் முதல் தலைமுறை வாக்காளர்களை குறி வைத்து தேர்தல் பணி செய்து வருகிறது. அக்கட்சியும் குறிப்பிட்ட சதவிகிதம் தாக்கத்தை ஏற்படுத்தும் என இத்தொகுதி மக்கள் கணிக்கின்றனர்.