• Sun. Oct 26th, 2025
WhatsAppImage2025-10-23at221255
WhatsAppImage2025-10-23at2213003
WhatsAppImage2025-10-23at221300
WhatsAppImage2025-10-23at2213004
WhatsAppImage2025-10-23at2213002
WhatsAppImage2025-10-23at221253
WhatsAppImage2025-10-23at221250
WhatsAppImage2025-10-23at2213001
WhatsAppImage2025-10-23at221249
WhatsAppImage2025-10-23at221252
WhatsAppImage2025-10-23at2213005
WhatsAppImage2025-10-23at2213006
WhatsAppImage2025-10-23at221251
previous arrow
next arrow
Read Now

குப்பை நகராக நாறும் மதுரை

ByKalamegam Viswanathan

Sep 8, 2025

குறட்டை விடும் மாநகராட்சி…

குப்பைகளை சேகரிக்க வேண்டிய மாநகராட்சி வாகனங்கள், மதுரை மாநகரம் முழுதும் குப்பைகளை தூவிச் செல்லும் வாகனங்களாக மாறியிருக்கின்றன. மல்லிகைப்பூவுக்கு புகழ் பெற்ற மதுரை மாநகரம் முழுதும் குப்பைகள் இறைந்து சுகாதாரத்துக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறி வருகிறது.

மதுரை மாநகராட்சி நூறு வார்டுகளைக் கொண்டு செயல்பட்டு வருகிறது.   இதில் சேகரிக்கப்படும் குப்பைகள் அனைத்தும் மதுரை அவனியாபுரம் பகுதியில் கொட்டப்படுகிறது.  

இந்த குப்பைகளை அகற்றுவதற்கு அவர் லேண்ட் எனும் தனியார் நிறுவனத்திடம் ஒப்பந்தம் செய்யப்பட்டு மாநகராட்சி நிர்வாகம் குப்பைகளை சேகரித்து வருகிறது.

கடந்த காலங்களில் மாநகராட்சியே குப்பைகளை அகற்றிய பொழுது ஆங்காங்கே குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டு குப்பைகளை பெட்டி பெட்டியாக வாகனங்களில் மூடியபடி சென்று கொண்டு இருந்தது. ஆனால் தற்பொழுது அந்த நிலை மாறி சாலை முழுவதும் ஆங்காங்கே குப்பைகள் ஒரே இடத்தில் கீழே கொட்டி கிடப்பதும் காற்றில் அது பறந்து செல்வதும் தொடர்கதையாகி உள்ளது.

இதுகுறித்து  மாநகராட்சி ஆணையர்  சித்ரா விஜயனிடமே அரசியல் டுடே சார்பில்  தொடர்பு கொண்டு  கேட்க முயன்றோம்.

அவர் உதவியாளர்தான் அலைபேசியை எடுத்தார்.  

அவரிடம்,  “மதுரை மாநகரம் முழுதும் குப்பை தொட்டிகள் எங்கேயுமே இல்லையே?” என்று  கேட்டோம்.

”அப்படியெல்லாம் இல்லை அனைத்து பகுதிகளிலும் குப்பைத் தொட்டி உள்ளது” என்றார்.

”சார் எந்த இடத்திலும் குப்பை தொட்டிகள் இல்லை, நீங்கள் எங்களுடன் வருகிறீர்களா? மதுரை முழுதும் சென்று பார்ப்போம்” என்று நாம்  மீண்டும் அழுத்தம் திருத்தமாக கூற…  “எந்த பகுதியில் இல்லை என்று சொல்லுங்கள்” என்று திரும்பக் கேட்டார்.

நாம் குறிப்பிட்ட இரண்டு வார்டுகளை சொல்ல,  அப்படியா நான் என்ன என்று பார்த்து சொல்கிறேன் என்று பதில் அளித்தார்.

”தனியார் நிறுவனத்தில் குப்பைகளை அள்ளிச் செல்லும் வாகனங்கள் முறைப்படி குப்பைகளை தார்ப்பாய் போட்டு மூடாமலும் திறந்த வெளியில் சாலை முழுவதும் சிதறவிட்டுச் செல்கின்றனவே. இதை கவனித்தீர்களா?” என்று கேட்டோம்.

“ அப்படி செல்லும் வாகனங்கள் மீது கட்டாயமாக நடவடிக்கை எடுக்கிறோம்” என உறுதி அளித்தார்.

”தூய்மை பணியாளர்களுக்கு பாதுகாப்பு கவசங்கள் உபகரணங்கள் உள்ளிட்டவை தனியார் நிறுவனத்தில் இருந்து ஏதும் வழங்கப்பட்டுள்ளதா?” என்று கேட்டதற்கு இணைப்பை உடனடியாக துண்டித்து விட்டார்

மேலும் இது குறித்து மாநகராட்சியில் சுகாதார ஆய்வாளர்கள் சிலரிடம் பேசினோம். பெயர் வெளியிட வேண்டாம் என்ற நிபந்தனையோடு பேசினார்கள்.

“தற்பொழுது  மதுரை மாநகரில் கொஞ்சம் கொஞ்சமாக குப்பை தொட்டிகளை அகற்றி வருகிறார்கள். சிறிய அளவிலான டாட்டா ஏஸ் வாகனத்தில் குப்பைகளை சேவை அமைக்கும் திட்டம் அமல்படுத்த உள்ளது.  இது சாத்தியப்படுமா என்பது  தனியார் நிறுவனத்திடம் உள்ளது.  

தனியார் நிறுவனத்தின் சார்பாக பாதுகாப்பு உபகரணங்கள், முக கவசம் கையுறை மழைக் காலங்களில் ரெயின் கோட் மற்றும் காலணிகள் ஆகியவை அனைத்து தூய்மை பணியாளர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.  எனினும் அவர்கள் பயன்படுத்த மறுக்கிறார்கள்.   இதை போட்டால்  கைகளில் அரிப்பு ஏற்படுவதாகும் இதை பயன்படுத்தாமல் குப்பை அள்ளுவதால் எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை என தெரிவிக்கிறார்கள்”  என்றனர்.

ஏற்கனவே மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரத் துறை அமைச்சகம் சார்பில் ‘சுவெச் சர்வெக் ஷான்’ 2024 – 25-ம் ஆண்டுக்கான நாட்டின் தூய்மையான நகரங்கள் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் 10 லட்சத்துக்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட 40 நகரங்கள் பட்டியலில் குஜராத் மாநிலம் அகமதாபாத் முதலிடமும், மத்தியபிரதேச மாநிலம் போபால் 2-வது இடமும், உத்தரபிரதேச மாநிலம் லக்னோ 3-வது இடமும் பிடித்தன. இந்தப் பட்டியலில் 38-வது இடத்தை சென்னையும், கடைசி இடமான 40-வது இடத்தை மதுரையும் பிடித்ததாக அறிவிக்கப்பட்டது.

இதைக் குறிப்பிட்டு மதுரை எம்.பி.யான சு. வெங்கடேசன்  விரிவாக ஓர் பதிவு வெளியிட்டு மதுரையை காப்பாற்ற முதல்வர் தலையிட வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

இதனால் திமுக நிர்வாகிகள் வெங்கடேசன் மீது விமர்சனங்களை வைத்தனர்.

ஆனால் மதுரையின் நிலை மாறவில்லை. குப்பைத் தொட்டிகள் இல்லாததாலும், குப்பை அகற்றும்  செயல்பாடுகளில் சுணக்கம் நிலவுவதாலும் குப்பை விஷயத்தில் மதுரை திணறிக் கொண்டிருக்கிறது.

மதுரை மாநகராட்சி சொத்து வரி முறைகேட்டில் திணறிக் கொண்டிருப்பதால் இதைப் பற்றியெல்லாம் கவனிக்கவும் அவர்களுக்கு நேரமில்லை போல!