• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண டிக்கெட் விநியோகம் தொடக்கம்..!

Byவிஷா

Apr 28, 2023

மதுரை சித்திரை திருவிழாவின் முத்திரை பதிக்கும் நிகழ்ச்சியான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண தரிசன டிக்கெட்டுகள் விநியோகம் தொடங்கி உள்ளது.
மதுரையில் மீனாட்சி திருக்கல்யாணத்தை காண வரும் பக்தர்களின் வசதிக்காக ரூ.200, ரூ.500 கட்டண டிக்கெட்டுகள், தெற்கு கோபுரம் வழியாக பக்தர்கள் கட்டணமில்லா தரிசன முறையிலும் அனுமதிக்கப்பட உள்ளனர். அதில் 500 ரூபாய் டிக்கெட்டில் 2,500 பேரும், 200 ரூபாய் டிக்கெட்டில் 3,200 பேரும் அனுமதிக்கப்பட உள்ளனர். 500 ரூபாய் பதிவில் 2 டிக்கெட்டுகளும், 200 ரூபாய் பதிவில் 3 டிக்கெட்டுகள் மட்டுமே பதிவு செய்ய முடியும். ஒரே நபர் 500, 200 ரூபாய் டிக்கெட்டுகளை பதிவு செய்ய முடியாது.
இந்த கட்டணச்சீட்டு முன்பதிவு செய்யும் வசதி கோவில் இணையதளம் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை இணைய தளம் மூலம் கடந்த 22-ந் தேதியில் இருந்து 25-ந் தேதி வரை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் 500 ரூபாய் டிக்கெட்டில் 3,917 பேரும், 200 ரூபாய் டிக்கெட்டில் 1876 பேர் என மொத்தம் 5,793 பேர் முன்பதிவு செய்திருந்தனர். டிக்கெட் பதிவு செய்தவர்களுக்கு நேற்று முன்தினம் குலுக்கல் முறையில் ஒதுக்கீடு செய்யப்பட்டு, கட்டணச்சீட்டு, ஒதுக்கீடு செய்யப்பட்டவர்களின் கைபேசி எண் மற்றும் மின் அஞ்சல் முகவரிக்கு குறுஞ்செய்தி அனுப்பப்பட்டது. அதில் உறுதி செய்யப்பட்ட குறுந்தகவல் கிடைக்க பெற்றவர்கள் 27-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை காலை 10 மணி முதல் இரவு 8 மணி முடிய பிர்லா விஷ்ரம் தங்கும் விடுதியில் உள்ள சிறப்பு விற்பனை மையத்தில் காண்பித்து பணம் செலுத்தி உரிய நுழைவுக் கட்டண டிக்கெட்டை பெற்று கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது.
நேற்று முதல் திருக்கல்யாண டிக்கெட் வினியோகம் தொடங்கியது. அதில் டிக்கெட் ஒதுக்கீடு செய்தவர்கள் தங்களுக்கு வந்த குறுந்தகவலை காண்பித்து டிக்கெட்டை பெற்று சென்றனர். முதல் நாளான நேற்று இரவு வரை ரூ.500 டிக்கெட் 370 பேரும், ரூ.200 ரூபாய் டிக்கெட்டை 480 பேரும் பெற்று சென்றனர். வெளியூரில் வசிப்பவர்கள் 1-ந் தேதி காலை 10 மணி முதல் மாலை 5.30 மணி வரை கட்டணச்சீட்டுகளை பெற்று கொள்ளலாம். திருக்கல்யாண டிக்கெட்டை பெறுபவர்கள் நேற்று காலை முதல் கோவிலில் கூட்டம், கூட்டமாக வந்து வரிசையில் நின்று வாங்கி சென்றனர்.