• Wed. Jan 21st, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

மதுரை மாங்குளம் தொட்டிச்சி அம்மன் கோவிலுக்கு பூட்டு.., மதுரை ஆட்சியரிடம் பூசாரிகள் மனு …

ByKalamegam Viswanathan

Jan 31, 2024

மதுரை உயர் நீதி மன்ற கிளை முன்னாள் அரசு குற்றவியல் வழக்குரைஞர் மகேந்திரன் தலைமையில், அழகர்கோவில் அருகே உள்ள மாங்குளத்தை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி உள்பட 7 பேர் கூட்டாக மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது, மதுரை அருகே மாங்குளம் கிராமத்தில், எங்களுக்கு சொந்தமான ஸ்ரீ தொட்டிச்சி அம்மன் குல தெய்வ கோவில் இருந்து வருகிறது. நாங்கள் 100க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த நபர்கள் பல தலைமுறைகளாக தொட்டிச்சியம்மன் கோவிலில் வழிபட்டு வருகின்றோம். இந்த கோவிலின் உட்புறம் ஆண்டிச்சாமி, வீரணன் சாபி, சின்ன கருப்பு, பெரிய கருப்ப போன்ற தெய்வங்களின் சிலைகள் அமைக்கப்பட்டு காலங்காலமாக வழிபாடு செய்யப்பட்டு, ஆண்டு தோறும் மாசித்திருவிழா நடத்தி வருகின்றோம். இந்நிலையில், எங்கள் கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரனுக்கும் இன்னொரு பங்காளியான சேனாதிபதிக்குமிடையே கடந்த 2023 ம் ஆண்டு ஜூன் 6ம் தேதி பூசாரி பட்டம் தொடர்பாக தகராறு ஏற்பட்டது. இது தொடர்பான குற்ற வழக்கு மதுரை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதற்கிடையே நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து தொட்டிச்சியம்மன் கோவிலில் மாசி சிவராத்திரி திருவிழா நடத்த முடிவு செய்து உள்ளோம். இந்நிலையில், அதே கிராமத்தை சேர்ந்த திமுக ஊராட்சி கிளைச்செயலாளர் ஜோதி, அவரது உறவினர் ராஜா ஆகிய இருவரும் கோவிலை சேர்ந்த ஒரு சிலருக்கு ஆதரவாக செயல்பட்டு தொட்டிச்சியம்மன் கோவிலை பூட்டி வைத்து உள்ளனர். இதனால், மாசி திருவிழா நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. இது குறித்து, நாங்கள் சம்பந்தபட்ட காவல் நிலையத்தில் புகார் கொடுத்து எவ்வித நடவடிக்கையும் எடுக்க வில்லை. எனவே, நாங்கள் மாசி திருவிழா நடத்த அனுமதி வழங்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.