மத்திய அமைச்சரவைக் குழுவின் ஒப்புதலின்படி, இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தின் (AAI) தலைமையக உத்தரவின் அடிப்படையில் மதுரை விமான நிலையம் அதிகாரப்பூர்வமாக ‘பன்னாட்டு விமான நிலையமாக’ இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான செய்தியாளர் சந்திப்பு மதுரை விமான நிலைய வளாகத்தில் நடைபெற்றது. இதில் மதுரை விமான நிலைய இயக்குனர் முத்துகுமார் செய்தியாளர்களை சந்தித்துக் கூறியதாவது:

கடந்த 2024 அக்டோபர் 1 முதல் மதுரை விமான நிலையம் 24 மணி நேரமும் இயங்கி வருகிறது. வாரத்திற்கு 242 திட்டமிடப்பட்ட விமான சேவைகள் நடைபெறுகின்றன. சென்னை, மும்பை, டெல்லி, ஹைதராபாத் மற்றும் பெங்களூரு போன்ற முக்கிய நகரங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. தற்போது கொழும்பு, துபாய் மற்றும் அபுதாபி ஆகிய நகரங்களுக்கு நேரடி விமானங்கள் இயக்கப்படுகின்றன.
1045 ஏக்கர் நிலப்பரப்பு, 17,560 சதுர மீட்டர் பரப்பளவிலான முனைய கட்டிடம், மற்றும் ஒரே நேரத்தில் 1230 பயணிகளைக் கையாளும் வசதி உள்ளது. மேலும், A-321 ரக விமானங்கள் தரை இறங்குவதற்கு ஏற்ற 2,285 மீட்டர் நீள ஓடுபாதையும், 12 விமான நிறுத்தங்களும் (Parking Bays) உள்ளன.
மதுரை மற்றும் தென் தமிழகம் உலக நாடுகளுடன் நேரடியாக இணைக்கப்படும். இது சுற்றுலா மற்றும் வணிக வளர்ச்சிக்கு பெரும் உதவியாக இருக்கும்.
அதிக பன்னாட்டு விமான நிறுவனங்கள் மதுரைக்கு வர வாய்ப்புள்ளதால், போட்டிகள் அதிகரித்து பயணிகளுக்கு குறைந்த விலையில் டிக்கெட்டுகள் கிடைக்க வழிவகை செய்யும்.
விமானங்களை இரவில் நிறுத்தி வைக்கும் வசதி உள்ளதால், சர்வதேச மற்றும் உள்நாட்டு விமான சேவைகள் மேலும் விரிவடையும்.

மத்திய அரசின் ‘விக்சித் பாரத் 2047’ (Vikhsit Bharat 2047) தொலைநோக்கு பார்வைக்கு ஏற்ப, தென் தமிழகத்தின் பொருளாதார மற்றும் சமூக மேம்பாட்டிற்கு இந்த அறிவிப்பு ஒரு முக்கிய மைல்கல்லாக அமையும்.
தற்போதுள்ள முனைய கட்டிடத்தை விரிவாக்கம் செய்தல், கார் நிறுத்துமிடம் மற்றும் இதர உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கான திட்ட அறிக்கை (Scope of Work) தயார் நிலையில் உள்ளது. அடுத்தகட்ட வளர்ச்சிப் பணிகள் விரைவில் தொடங்கும் என கூறினார்.
104 ஏக்கர்கள் நீர் நிலையம் கையகப்படுத்துவதில் சிக்கல் உள்ளது. இது தொடர்பாக ஆலோசனைகள் செய்யப்பட்டு நல்ல முடிவுகள் எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக நீதிமன்றம் சாதாரணமான அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது விரைவில் நல்ல செய்தி வரும் நீதிமன்றத்திற்கும் இந்த நேரத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.
நவி மும்பை பூனை போன்ற மாநிலங்களில் அந்த விமானங்களை கூடுதலாக இயக்க கேட்டிருந்தார்கள்.
இன்னும் இரண்டு ஆண்டுகளில் புதிய முனைய கட்டுமானம் முடிவடையும் என்று எதிர்பார்க்கிறோம்.

ஒரு மணி நேரத்திற்கு 1230 பயணிகளை கையாள முடியும். புதிதாக திட்டமிடப்பட்டுள்ள முனையத்தில் 2000 பயணிகளை கையாள முடியும். புதிதாக வரும் கட்டிடம் சர்வதேச விமான பயணிகளுக்காக பயன்படும்.
சர்வதேச விமான நிலையமாக அறிவிக்கப்பட்டுள்ளதால் ஏற்றுமதி இறக்குமதி அதிகாரிக்க வாய்ப்புள்ளது.
நிலம் கையகப்படுத்தப்பட்ட பிறகு போக்குவரத்து மாற்றம் அல்லது அண்டர் பாஸ் அமைப்பது குறித்து திட்டமிடப்படும்.



