• Thu. Nov 27th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

நஞ்சப்பசத்திரம் மக்களை பாராட்டி லெப்டினண்ட் ஜெனரல் அருண் பெருமிதம்

Byமதி

Dec 13, 2021

நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைத்தளபதி பிபின் ராவத் உள்பட 13 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பான விசாரணையை ஏர்மார்‌ஷல் மன்வேந்திரசிங் தலைமையிலான குழுவினர் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் விபத்து நடந்த நஞ்சப்பசத்திரம் பகுதியை லெப்டினண்ட் ஜெனரல் அருண் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதைத் தொடர்ந்து எம்.ஆர்.சி. ராணுவ முகாமில் விபத்தில் சிக்கியவர்களை மீட்க உதவியவர்களுக்கு நடந்த பாராட்டு விழாவில் லெப்டினண்ட் ஜெனரல் அருண் பங்கேற்றார்.

மேலும் சிறப்பாக செயல்பட்ட போலீசார், தீயணைப்பு வீரர்கள், தன்னார்வலர்கள், பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்தும், சால்வை அணிவித்தும், பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார். இதில் ராணுவ வீரர்கள், தீயணைப்பு துறையினர், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அப்போது பேசிய அவர், ஹெலிகாப்டர் விபத்து நடந்த தகவல் அறிந்ததும், அதில் சிக்கியவர்களை மீட்கும் பணியை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துரிதப்படுத்தினார். குறிப்பாக விபத்து தகவல் அறிந்த 10-வது நிமிடத்திலேயே தீயணைப்பு துறையினர், போலீசார் மற்றும் மாவட்ட நிர்வாகத்தினரை அனுப்பி மீட்பு பணியை மேற்கொண்டார். அவருக்கு எங்களது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.

இதேபோல் அமைச்சர்களும் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணிக்கு உதவினர். ஹெலிகாப்டர் விபத்தில் உதவாதவர்கள் என்று யாரையுமே கூறமுடியாது. அனைவருமே ஓடி வந்து பல்வேறு உதவிகளை செய்து மீட்பு பணிக்கு உதவினர். அதிலும் நஞ்சப்ப சத்திரம் மக்கள் விபத்து நடந்ததும், தங்கள் பகுதியில் இருந்து தண்ணீரை எடுத்து வந்து ஊற்றி தீயை அணைத்து மீட்பு பணிக்கு உதவியுள்ளனர். மேலும் தீயணைப்பு, ராணுவத்தினர் வந்த பின்னரும் அவர்களுக்கு பல உதவிகள் செய்து கொடுத்துள்ளனர். அவர்களுக்கு எங்களது நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.

இதுபோன்ற குடிமக்கள் இருந்தால் இதே ராணுவ உடையை 5 ஆயிரம் முறை கூட அணிந்து கொண்டு நாங்கள் பணியாற்றுவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து நஞ்சப்பசத்திரம் பகுதியில் ஆய்வு மேற்கொண்டு, அப்பகுதி மக்களை நேரில் சந்தித்து, நன்றி தெரிவித்து நிவாரண பொருட்களையும் வழங்கினார்.