கோவை, பேரூர் பகுதியைச் சேர்ந்த லாரி ஓட்டுனர் குமார், கிளீனராக இளையரசு இவர்கள் சரவணம்பட்டி பகுதியில் உள்ள தனியார் கம்பெனி ஒன்றுக்கு சிலிக்கான் லோடு ஏற்றிக் கொண்டு நேற்று இரவு இறக்கி உள்ளனர்.

பின்னர் அங்கு இருந்து துடியலூர் சாலையில் இருந்து சரவணம்பட்டி சாலையை இணைக்கும் பகுதிக்கு சென்று கொண்டு இருந்தார். அப்பொழுது ஓட்டுநர் குமாருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு உள்ளது.
இதன் காரணமாக அவரின் கட்டுப்பாட்டை இழந்த அந்த லாரி திடீரென எதிர் திசையில் பாய்ந்து அந்த சாலையில் சென்று கொண்டு இருந்த நான்கு கார்கள் மீது மோதியது.
இந்த விபத்தின் சி.சி.டி.வி காட்சிகள் தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
லாரி கட்டுப்பாட்டை இழந்து கார்கள் மீது மோதிக் கொண்டு இருந்தபோது அருகே அமர்ந்திருந்த கிளீனர் இளையரசு துரிதமாக செயல்பட்டு லாரியின் பிரேக்கை அழுத்தி வாகனத்தை சாலையின் நடுவே நிறுத்தினார். இதனால் மேலும் விபத்து ஏற்படாமல் தவிர்க்கப்பட்டது.

அக்கம், பக்கத்தினர் உதவியுடன் ஓட்டுனர் குமாரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் பாரி ஓட்டுனர் குமார் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காந்திபுரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல் துறையினர் விபத்துக்குள்ளான வாகனத்தை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர்.




