• Wed. Nov 19th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

இன்று சூரசம்ஹாரம்.., தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை..!

Byவிஷா

Nov 18, 2023

திருச்செந்தூரில் கந்தசஷ்டி திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் இன்று நடைபெறுவதையொட்டி, தூத்துக்குடி மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
அறுபடை வீடுகளில் 2ம்படைவீடான திருச்செந்தூர் முருகன் கோவில், கடலுக்கு அருகில் உள்ள தலம் என்பதால், பல்வேறு சிறப்புக்களைக் கொண்டுள்ளது. இதனால், தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இங்குள்ள கடற்கரையில் நீராடி முருகனை தரிசனம் செய்துவிட்டு செல்வார்கள். அதிலும், கந்தசஷ்டி திருவிழாவானது ஒவ்வொரு வருடமும் அங்கு வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த வருடமும், இந்த முருகன் கோயிலில், கந்தசஷ்டி விழா மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
கடந்த 12-ந் தேதி தொடங்கிய இந்த கந்தசஷ்டி விழாவானது நாளை 19-ந் தேதி வரை நடைபெறுகிறது. திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசாமி திருக்கோவிலில் கந்தசஷ்டி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நிகழ்ச்சியானது இன்று 18-ந் தேதி நடைபெற உள்ளது..
இதையடுத்து, இன்றைய தினம், தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட கலெக்டர் ஜி.லட்சுமிபதி ஏற்கனவே உத்தரவு பிறப்பித்திருந்தார். சூரசம்ஹாரத்தை காண லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருவதால் திருச்செந்தூரில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. மொத்த திருச்செந்தூருமே விழாக்கோலத்துடன் காணப்படுகிறது.. தொடர்ந்து பக்தர்கள் திரண்டு வருவதால், போலீஸ் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல, பக்தர்களின் வசதிக்காக சென்னையில் இருந்து சிறப்பு ரயிலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனிடையே, சூரசம்ஹாரம் நடைபெறுவதையொட்டி டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.