நற்றிணைப் பாடல் 134:
இனிதின் இனிது தலைப்படும் என்பது
இதுகொல் வாழி தோழி காதலர்
வரு குறி செய்த வரையகச் சிறு தினைச்
செவ் வாய்ப் பாசினம் கடீஇயர் கொடிச்சி
அவ் வாய்த் தட்டையடு அவணை ஆக என
ஏயள்மன் யாயும் நுந்தை வாழியர்
அம் மா மேனி நிரை தொடிக் குறுமகள்
செல்லாயோ நின் முள் எயிறு உண்கு என
மெல்லிய இனிய கூறலின் யான் அ•து
ஒல்லேன் போல உரையாடுவலே
பாடியவர்: ஆசிரியர் பெயர் தெரியவில்லை
திணை: குறிஞ்சி
பொருள்:
தோழியும் தலைவியும் உரையாடுகின்றனர். தோழி! இனிமையில் இனிமை பிறக்கும் என்பது இதுதானா? காதலர் உன்னுடன் வரும்படிக் குறியிடம் காட்டினார். அதற்கு ஏற்றாற் போல உன் தாயும் தந்தையும் தினைப்புனம் காக்கச் செல்லும்படிக் கூறியுள்ளனர். மலையில் தினை விளைந்திருக்கிறது. பறவை இனங்கள் அதனைக் கவர்ந்துண்ண வருகின்றன. கொடிச்சியே! தட்டை இசைக்கருவியை எடுத்துக்கொண்டு அவற்றை ஓட்டுவதற்கு அங்குச் செல்க என்று ஏவியுள்ளனர். உன் அரும்பு-முள் போன்ற இதழ் சுவையை உண்பததற்காக அவர் அங்கே காத்திருக்கிறார். செல்கிறாயா. தோழி இப்படி மென்மையாகச் சொன்னாள். நீ கூறுவது சரி. நான் அதற்கு இணங்கமாட்டேன், என்று தலைவி போலியாகக் கூறி நடிக்கிறாள்.