• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

இலக்கியம்

Byவிஷா

Mar 11, 2023

நற்றிணைப் பாடல் 133:
தோளே தொடி கொட்பு ஆனா கண்ணே
வாள் ஈர் வடியின் வடிவு இழந்தனவே
நுதலும் பசலை பாயின்று திதலைச்
சில் பொறி அணிந்த பல் காழ் அல்குல்
மணி ஏர் ஐம்பால் மாயோட்கு என்று
வௌ; வாய்ப் பெண்டிர் கவ்வை தூற்ற
நாம் உறு துயரம் செய்யலர் என்னும்
காமுறு தோழி காதல்அம் கிளவி
இரும்பு செய் கொல்லன் வௌ; உலைத் தெளித்த
தோய் மடற் சில் நீர் போல
நோய் மலி நெஞ்சிற்கு ஏமம் ஆம் சிறிதே

பாடியவர்: நற்றமனார்
திணை: குறிஞ்சி

பொருள்:

தோளோ, வளையல்களை நழுவ விடுகின்றன. கண்களோ, தன் ஈரமான அம்பு போன்ற வடிவழகுப் பார்வையை இழந்துவிட்டன. நெற்றியோ பசலை பாய்ந்து கிடக்கிறது. வயிர மணிகளை அணிந்த அல்குலோ, வரிக்கோடுகளில் புள்ளிகள் படிந்து கிடக்கின்றன. கூந்தல் மட்டும் கருத்தவாறே உள்ளது. இதுதான் இந்த மாயோளின் நிலைமை. கொடிய வாயை உடைய பெண்கள் இந்த மாயோளைப் பற்றி கவ்வை தூற்றுகின்றனர். தோழி! தூற்றும்படி இப்படியே விட்டு அவர் உனக்குத் துன்பம் செய்யமாட்டார் என்று நீ சொல்கிறாய். நான் விரும்பும் தோழி அல்லவா நீ. உன் சொல் காதல்-கிளவி. கொல்லன் உலையில் தீ பற்றி எரியும்போது மடலில் தண்ணீர் மொண்டு சிறிது தெளிப்பான். தீ அடங்கி, இரும்பு காயவேண்டிய கனப்பு மட்டும் இருக்கும். அதுபோல உன் ஆறுதல் சொல்லானது என் துன்ப எரியைத் தணிக்கிறது. தலைவி தன் தோழியிடம் சொல்கிறாள்.