• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

இலக்கியம்

Byவிஷா

Feb 15, 2023

நற்றிணைப் பாடல் 115:

மலர்ந்த பொய்கைப் பூக் குற்று அழுங்க
அயர்ந்த ஆயம் கண் இனிது படீஇயர்
அன்னையும் சிறிது தணிந்து உயிரினள் இன் நீர்த்
தடங் கடல் வாயில் உண்டு சில் நீர் என
மயில் அடி இலைய மாக் குரல் நொச்சி
மனை நடு மௌவலொடு ஊழ் முகை அவிழ
கார் எதிர்ந்தன்றால் காலை காதலர்
தவச் சேய் நாட்டர் ஆயினும் மிகப் பேர்
அன்பினர் வாழி தோழி நன் புகழ்
உலப்பு இன்று பெறினும் தவிரலர்
கேட்டிசின் அல்லெனோ விசும்பின் தகவே

பாடியவர்: ஆசிரியர் பெயர் இடம் பெறவில்லை
திணை: முல்லை

பொருள்:

பொருள் தேடச் சென்ற நாட்டில் அழியாப் புகழைப் பெற்றாலும் மீண்டு வரத் தவிர மாட்டேன் – என்று தலைவன் சொன்னதைத் தலைவி நினைவுபடுத்திக் கொண்டு ஆறுதலாக இருக்கிறாள்.
பொய்கையில் இறங்கிப் பூ பறிக்கும் மகளிர் அயர்வால் கண்ணுறக்கம் கொள்கின்றனர். என் தாயும் சினம் தணிந்து பெருமூச்சு விடுகிறாள். மழைமேகம் அகன்ற கடலிலுள்ள நீரில் உப்பை விலக்கிவிட்டு இனிய நீரை மட்டும் உட்கொண்டு சில நீரை மழையாகப் பொழிகிறது. மனை வேலியில் மயிலின் காலைப்போல இலையைக் கொண்டிருக்கும் நொச்சி மனை நடுவில் உள்ள மௌவல் மரத்தோடு சேர்ந்து பூத்துக் குலுங்குகிறது. இப்படிப் பூத்துக் குலுங்கும்படி கார் காலம் வந்திருக்கிறது. காதலர் மிகத் தொலைவிலுள்ள நாட்டில் இருக்கிறார். 

என்றாலும், தோழி, அவர் மிகப்பெரும் அன்பு கொண்டவர். அவர் அங்குக் காயாத நல்ல புகழைப் பெற்றாலும் அங்கே தங்கமாட்டார் என்னும் செய்தியை அவர் கூறக் கேட்டிருக்கிறேன் அல்லவா? அது மழைமேகம் போன்ற தகைமை அல்லவா?