• Thu. Nov 27th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

இலக்கியம்

Byவிஷா

Dec 22, 2022

நற்றிணைப் பாடல் 81:

இரு நிலம் குறையக் கொட்டிப் பரிந்தின்று
ஆதி போகிய அசைவு இல் நோன் தாள்,
மன்னர் மதிக்கும் மாண் வினைப் புரவி
கொய்ம் மயிர் எருத்தில் பெய்ம் மணி ஆர்ப்ப,
பூண்கதில் பாக! நின் தேரே: பூண் தாழ்
ஆக வன முலைக் கரைவலம் தெறிப்ப
அழுதனள் உறையும் அம் மா அரிவை
விருந்து அயர் விருப்பொடு வருந்தினள் அசைஇய
முறுவல் இன் நகை காண்கம்!
உறு பகை தணித்தனன், உரவு வாள் வேந்தே.

பாடியவர்: அகம்பன் மாலாதனார்
திணை: முல்லை

பொருள்:
வேந்தன் பகைத் தீயைத் தணியச் செய்துவிட்டான். பாக! உன் தேரில் குதிரையைப் பூட்டு.
கணவன் உடன் இருக்க விருந்தினரைப் பேணவேண்டும் என்னும் ஆசையோடு என் மனைவி தனிமையில் கண்ணீர் வடித்துக்கொண்டிருப்பதை நான் சென்று போக்கவேண்டும். – என்கிறான் தலைவன். பெருநிலத்தில் பள்ளம் உண்டாகும்படிக் குளம்புகளால் கொட்டிக்கொண்டு கால் பரிந்து ஆதி தாள ஓசை வரும்படிப் பாய்ந்தோடும். மேடுபள்ளம் கண்டு அசையாத வன்முயற்சி கொண்டது. மன்னர் பலரும் மதிக்கும் மாட்சிமையுடன் தன் தொழிலை ஆற்றக்கூடியது. மயிர் கத்தரிக்கப்பட்டிருக்கும் கழுத்தில் மணியை ஆட்டிக்கொண்டிருக்கும். அந்தக் குதிரையைத் தேரில் பூட்டுக. என் மனைவி அம் மா அரிவை. அழகிய மாந்தளிர் போன்ற அரிவைப் பருவத்தவள். விருந்தினரைப் பேணுவதில் அவளுக்குக் கொள்ளை ஆசை. நான் அவள் அருகில் இல்லாததால் விருந்தினரைப் பேணமுடியவில்லையே என்று கண்ணீர் விட்டுக்கொண்டிருப்பாள். மார்பிலே பூண் அணிந்திருப்பாள். மார்பகக் கரைமேடுகளில் கண்ணீர் பட்டுத் தெரித்துக்கொண்டிருக்கும். அந்த நிலை மாறி அவள் முகத்தில் புன்னகையை நான் காணவேண்டும். குதிரையைத் தேரில் பூட்டுக – என்கிறான் தலைவன்.