• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

இலக்கியம்

Byவிஷா

Dec 19, 2022

நற்றிணைப் பாடல் 78:
கோட் சுறா வழங்கும் வாள் கேழ்இருங் கழி
மணி ஏர் நெய்தல் மா மலர் நிறைய,
பொன் நேர் நுண் தாது புன்னை தூஉம்,
வீழ் தாழ் தாழைப் பூக் கமழ் கானல்,
படர் வந்து நலியும் சுடர் செல் மாலை,
நோய் மலி பருவரல் நாம் இவண் உய்கம்;
கேட்டிசின் வாழி, தோழி! தெண் கழி
வள் வாய் ஆழி உள் வாய் தோயினும்,
புள்ளு நிமிர்ந்தன்ன பொலம் படைக் கலி மா
வலவன் கோல் உற அறியா,
உரவு நீர்ச் சேர்ப்பன், தேர்மணிக் குரலே!

பாடியவர்: கீரங்கீரனார்
திணை: நெய்தல்

பொருள்:

தலைவன் வரவு கண்டு, தோழி தலைவிக்குச் சொல்ல இருவரும் மகிழ்கின்றனர். 
நெய்தல் பூவில் புன்னை உதிர்வதும், தாழம்பூ மணப்பதும் இருவருக்கும் உண்டான மகிழ்ச்சியைக் குறிக்கும் இறைச்சிப்பொருள். வெளிச்சம் இருக்கும் உப்பங்கழி. கொம்பு உள்ள சுறாமீன் மேயும் உப்பங்கழி. நீலமணி நிறத்தில் நெய்தல் பூக்கள் நிறைய பூத்திருக்கின்றன. அதில் புன்னைமரம் தன் பொன்னிறம் கொண்ட பூக்களைத் தூவுகிறது. அது கானல் நிலம். அங்கே விழுது தொங்கும் தாழம்பூவின் மணம் கமழ்கிறது. மாலை நேரம் வந்துவிட்டது. வெளிச்சம் மங்கிக்கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில் தனிமையில் இருக்கிறோமே என்னும் நினைவலைத் துன்பம் வருவது இயல்பே. இந்தத் துன்பத்திலிருந்து இப்போது தப்பிவிட்டோம்.  தோழி! உள்ளுக்குள்ளே காது கொடுத்துக் கேள். சேர்ப்பன் வரும் தேரின் மணியோசை கேட்கிறது. கோல் ஓச்சல் இல்லாமல் மகிழ்வோடு குதிரை அந்தத் தேரை இழுத்துக்கொண்டு வருகிறது. பறவை போல் பறந்து இழுத்துக்கொண்டு வருகிறது. உப்பங்கழியில் அதன் சக்கரம் இறங்கிவிட்டாலும் கவலைப்படாமல் இழுத்துக்கொண்டு வருகிறது. அவன் வரவால் நம் துன்பம் நீங்கி நமக்கு மகிழ்ச்சி பொங்குகிறது.