• Fri. Dec 12th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

இலக்கியம்

Byவிஷா

Dec 14, 2022

நற்றிணைப் பாடல் 75:

நயன் இன்மையின், பயன் இது என்னாது,
பூம் பொறிப் பொலிந்த, அழல் உமிழ் அகன் பை,
பாம்பு உயிர் அணங்கியாங்கும் ஈங்கு இது
தகாஅது வாழியோ, குறுமகள்! நகாஅது
உரைமதி; உடையும் என் உள்ளம் சாரல்
கொடு விற் கானவன் கோட்டுமா தொலைச்சிப்
பச்சூன் பெய்த பகழி போல,
சேயரி பரந்த மா இதழ் மழைக் கண்
உறாஅ நோக்கம் உற்ற என்
பைதல் நெஞ்சம் உய்யுமாறே.

பாடியவர்: மாமூலனார்
திணை: குறிஞ்சி

பொருள்:
தலைவன் தலைவியைத் தருமாறு தோழியிடம் இப்படிக் கெஞ்சுகிறான்.

உங்கள் நெஞ்சிலே அன்பு இல்லை. எனக்குத் தலைவியைத் தராததால் விளையும் பயன் இது என்பதை நீங்கள் எண்ணிப் பார்க்கவும் இல்லை. என்னை விலக்குகிறீர்கள். பாம்பின் அழகிய புள்ளித் தோற்றப் பைக்குள் நச்சுத் தீ இருப்பது போல் நடந்துகொள்கிறீர்கள். இவ்விடத்தில் இது தக்கது அன்று. சிறுபெண்ணே! என்னைப் பார்த்து ஏளனமாகச் சிரிக்காமல் சொல். இன்றேல் என் உள்ளம் உடைந்துவிடும். மலைச்சாரலில் வாழும் கானவர் காட்டுப்பன்றியை வீழ்த்திய அம்பில் ஒட்டிக்கொண்டிருக்கும் பச்சைக் கறித்துண்டு போன்ற கண்ணால், மாந்தளிர் போன்று சிவந்த வரிக்கோடுகள் கொண்ட கண்ணால், பார்க்காமல் பார்க்கும் கண்ணால் நான் என் நெஞ்சத் துன்பம் நீங்கிப் பிழைக்க வழி செய்யுங்கள்