நற்றிணைப் பாடல் 176:
எம் நயந்து உறைவி ஆயின் யாம் நயந்து
நல்கினம் விட்டது என் நலத்தோன் அவ் வயின்
சால்பின் அளித்தல் அறியாது அவட்கு அவள்
காதலள் என்னுமோ உரைத்திசின் தோழி
நிரைத்த யானை முகத்து வரி கடுப்பப்
போது பொதி உடைந்த ஒண் செங் காந்தள்
வாழை அம் சிலம்பின் வம்பு படக் குவைஇ
யாழ் ஓர்த்தன்ன இன் குரல் இன வண்டு
அருவி முழவின் பாடொடு ஒராங்கு
மென்மெல இசைக்கும் சாரல்
குன்ற வேலித் தம் உறைவின் ஊரே
பாடியவர்: ஆசிரியர் பெயர் இடம் பெறவில்லை
திணை: குறிஞ்சி
பொருள்:
அவன் மனைவி என்னோடு நயந்து வாழ்ந்தால், நான் அவள் கணவனை அவளுக்கு விட்டுக்கொடுப்பேன். அவன் என் நலத்தை விரும்புபவனாக இருக்கிறான். நான் அவனுக்கு என்னைச் சான்றாண்மையோடு அவனுக்குத் தந்துகொண்டிருக்கிறேன். தோழி! (விறலியே!) அவளுக்கு எடுத்துச் சொல். அவள் ஊருக்குச் சென்று எடுத்துச் சொல். அவள் ஊர் – அவள் ஊரில் செங்காந்தள் பூ பூத்துக்கிடக்கும். வாழைமரச் சோலையில் பூத்துக் கிடக்கும். அதன் தேனை உண்ண வண்டினம் புதிது புதிதாகக் குவியும். அவை யாழிசை கேட்பது போலப் பாடும். கொட்டும் அருவி முழவிசை போல முழங்கும். இப்படிப்பட்ட குன்றத்து வேலி நிலத்தில் அவள் ஊர் இருக்கிறது. அங்குச் சென்று எடுத்துச் சொல். – இவ்வாறு பரத்தை ஒருத்தி தூது சொல்லும் விறலியிடம் சொல்கிறாள்.