• Fri. Nov 21st, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

கல்விபோல் விளையாட்டும் வாழ்க்கையை உயர்த்தும் -போலீஸ் சூப்பிரண்டு மயில்வாகனன் பேச்சு…

Byகுமார்

Aug 27, 2022

கல்விபோல் விளையாட்டும் வாழ்க்கையை உயர்த்தும் என மதுரையில் நடந்த பள்ளி மாணவ- மாணவியர்க்கு இடையேயான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் லஞ்ச ஒழிப்பு துறை போலீஸ் சூப்பிரண்டு மயில்வாகனன் பேச்சு.
மதுரை குயின் மீரா சர்வதேச பள்ளியில் “பி பிட் சீசன்-10 ” என்ற தலைப்பில் உடற்பயிற்சி மற்றும் உடல் ஆரோக்கியம் குறித்த சிறப்பு கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது. பள்ளியின் தலைவர் டாக்டர் சந்திரன் முன்னிலை வகித்தார். பள்ளியின் நிர்வாக இயக்குனர் அபிநாத் சந்திரன், கல்வி இயக்குனர் சுஜாதா குப்தன், துணை இயக்குனர்( நிர்வாகம்) செல்வி ஜோஸ்பின் அன்னி ஷீபா அருள்தாஸ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.பள்ளியின் ‘பி பிட்’ திட்டத்தின் பிராண்ட் அம்பாசிடரும், ஊழல் தடுப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை மேற்கு மண்டல போலீஸ் சூப்பிரண்டுமான மயில்வாகனன் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடினார்.
அப்போது அவர் பேசியதாவது:- நெதர்லாந்து நாட்டில் நடந்த உலக காவலர்கள் மற்றும் தீயணைப்பு வீரர்களுக்கான விளையாட்டு போட்டிகளில் வெற்றிபெற்று உலக அரங்கில் இந்திய கொடியை சுமந்தது பெருமையான தருணம். தோல்வியை கடந்தால் தான் வெற்றியை சந்திக்க முடியும். தோல்விகளை கையாள தெரிந்து கொள்ள வேண்டும்.
ஒவ்வொருவருக்கும் வெற்றி வாய்ப்பு ஒவ்வொரு சூழ்நிலையிலும் கிடைக்கும். அதனை சரிவர பயன்படுத்தி கொள்ள வேண்டும். கல்வி எந்த அளவிற்கு முக்கியமோ, அந்த அளவிற்கு விளையாட்டும் முக்கியம். விளையாட்டு வாழ்க்கையை உயர்ந்த இடத்திற்கு அழைத்து செல்லும். உடலை ஆரோக்கியமாக வைத்து கொண்ட ஒருவரால் உலகில் உள்ள அனைத்து இடங்களிலும் சாதிக்க முடியும். சூழ்நிலை தான் மனிதர்களை தீர்மானிக்கிறது. அந்த சூழ்நிலையால் தான் நான் காவல்துறை அதிகாரியாக மாற நேர்ந்தது. எதையும் எளிதாக எடுத்து கொள்ள வேண்டும். அப்போது தான் வாழ்க்கையில் சாதிக்க முடியும். மனதை ஒரு நிலைப்படுத்தினால் வெற்றி கிடைக்கும். எந்த ஒரு அழுத்தமான சூழ்நிலையையும் கையாள கற்று கொள்ள வேண்டும். பிறந்தோம், வாழந்தோம், மடிந்தோம் என்று இருக்க கூடாது. நம்மால் முடிந்ததை எதையாவது ஒரு துறையில் சாதிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக, ‘பிபிட்’ சவாலில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பள்ளி மாணவ, மாணவிகள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் என பலர் கலந்து கொண்டனர்.