• Sun. Apr 2nd, 2023

லைஃப்ஸ்டைல்

Byவிஷா

Mar 18, 2023

காய்கறிகளில் அடங்கியுள்ள சத்துக்கள் மற்றும் அதன் பயன்கள்:

கத்தரிக்காய் :

கத்தரிக்காயில் பல வண்ணங்கள் உண்டு என்றாலும் அனைத்திலும் உள்ள சத்து ஒன்றேதான். பிஞ்சு கத்தரிக்காய் சமைப்பதற்கு நல்லது. வாய்வு, பித்தம், கபம் போகும். அதனால் தான் பத்தியத்துக்கும் இக்காயைப் பயன்படுத்தலாம். அம்மை நோயால் பாதிக்கப்படுபவர்கள் இதை உண்டு நல்ல பயன் பெறலாம்.
அவரைக்காய் :

அவரைக்காயிலும் பல வகைகள் உண்டு. வெள்ளை அவரைப் பிஞ்சை நோயாளிகள் உண்ணும் காலத்தில் பத்திய உணவாக உண்ணலாம். இதை சமைத்து உண்டால் உடலை உரமாக்கும். காம உணர்ச்சியைப் பெருக்கும். சூட்டுடம்புக்கு இது மிகவும் நல்லது. இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு இது மிகவும் ஏற்றது.
வெண்டைக்காய் :

வெண்டைக்காய் குளிர்ச்சி தன்மை உடையது. இதனுடன் சீரகம் சேர்த்து சமைப்பது நல்லது. இது வறண்ட குடலைப் பதப்படுத்தும் இதில் வைட்டமின் ‘சி’, ‘பி’ உயிர்ச்சத்துக்கள் உள்ளன. இதை உண்டுவந்தால் சிறுநீர் பெருகும். நாள்பட்ட கழிச்சல் நீங்கும். சூட்டைத் தணிக்கும். உஷ்ண இருமலைக் குணமாக்கும்.

வெண்டைக்காய் பிஞ்சுகளை பச்சையாகவே தினந்தோறும் வெறும் வயிற்றில் உண்டு வந்தால், மருந்து இல்லாமலேயே இந்திரிய நஷ்டம் சரிப்பட்டு விடும். உடம்பில் வாயுமிக்கவர்கள் இதை அதிகமாக உண்டால் வயிற்று வலியை ஏற்படுத்தி விடும்.
புடலங்காய் :

புடலங்காய் சற்று நீரோட்டமுள்ள காய். சூட்டுடம்புக்கு ஏற்றது. உடம்பின் அழலையைப் போக்கும், தேகம் தழைக்கும். இது எளிதில் ஜீரணமாகி நல்ல பசியை உண்டாக்கும். வாத, பித்த கபங்களால் ஏற்படும் திரிதோஷத்தைப் போக்கும். வயிற்றுப் பொருமல், வயிற்றுப் பூச்சி இவற்றை போக்கும்.
வாழைத்தண்டு :

வாழைத்தண்டு பித்தத்தைத் தணிக்கக் கூடியது. இதன் சுபாவம் சூடு என்றாலும் சிறு நீரைப் பெருக்கும். வாழைத்தண்டுப் பச்சடி உடம்பின் உஷ்ணத்தைப் போக்கும். வாத பித்தம், உஷ்ணம் முதலியவற்றைத் தணிக்கும், கபத்தை நீக்கும்.
சுரைக்காய்:

சுரைக்காய் உடல் சூட்டைத் தணிக்கும். இதன் சுபாவம் குளிர்ச்சி. இது சிறுநீரைப் பெருக்கும். உடலை உரமாக்கும். மலச் சுத்தியாகும். தாகத்தை அடக்க வல்லது.

ஆனால் இது பித்த வாயுவை உண்டு பண்ணும். கடுஞ்சுரைக்காய் என்று ஒரு வகை உண்டு. இது குளுமை செய்வது. தாகத்தை அடக்கும். சீதளத்தையும், பித்தத்தையும் போக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *