• Sat. Mar 14th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

ஆடுகளை இரையாக்கிய சிறுத்தை மீண்டும் ஊருக்குள் நடமாட்டம்- பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்

Byadmin

Mar 7, 2025

கோவையில் ஆடுகளை வேட்டையாடிய சிறுத்தை மீண்டும் குடியிருப்பு பகுதிக்குள் வந்துள்ளது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை, வடவள்ளி அடுத்த சிறுவாணி சாலை ஓணாப்பாளையம் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் மீண்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது. வெண்ணிலா என்ற விவசாயி தனது 5 ஏக்கர் தோட்டத்தில் வளர்த்து வந்த 8 ஆடுகளில் 4 ஆடுகளை சிறுத்தை கொன்றுள்ளது. சிசிடிவி காட்சிகளில் சிறுத்தை ஆடுகளை வேட்டையாடுவதும், ஒரு ஆட்டை கவ்விச் செல்வதும் பதிவாகியுள்ளது. சில நாட்களுக்கு முன் 4 ஆடுகளைக் கொன்ற சிறுத்தை மீண்டும் அதே பகுதிக்கு வந்துள்ளது பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தொண்டாமுத்தூர் பகுதியில் ஏற்கெனவே சிறுத்தை ஆடுகளை வேட்டையாடிய நிலையில், தற்போது ஓணாப்பாளையம் பகுதியில் சிறுத்தை அட்டகாசம் செய்து வருவது அப்பகுதி மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது. விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

மேலும் பாரதியார் பல்கலைக்கழக வளாகத்திற்குள் சிறுத்தை நடமாட்டம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து பல்கலைக்கழக நிர்வாகம் மாணவர்களுக்கு விடுமுறை அளித்து வீட்டிற்கு அனுப்பி வைத்தது. அத்துடன் வனத்துறையினர் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி சிறுத்தையை பிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். வனத்துறையினர் பொதுமக்களுக்கு சில அறிவுரைகளை வழங்கியுள்ளனர். இரவு நேரங்களில் தனியாக வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும். வீடுகளைச் சுற்றி வெளிச்சமாக வைத்திருக்க வேண்டும். கால்நடைகளை பாதுகாப்பான இடங்களில் கட்ட வேண்டும். சிறுத்தை நடமாட்டம் குறித்து தகவல் தெரிந்தால் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.

சிறுத்தையைப் பிடிக்க வனத்துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அப்பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். சிறுத்தையின் நடமாட்டத்தை கண்டறிந்து, அதை கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஏற்கெனவே ஆடுகளை கொன்ற இடத்திற்கே சிறுத்தை மீண்டும் வந்துள்ளது கோவையில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.